வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (15/11/2017)

கடைசி தொடர்பு:14:15 (15/11/2017)

ஐடி விங்கை பலப்படுத்திய பன்னீர்செல்வம்! - எடப்பாடிக்கு எதிராக புது வியூகம்?

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனக்கென ஒரு ஐடி விங்கை வைத்திருந்த சூழலில், தற்போது புதிய நிர்வாகிகளைக் கொண்டு ஐடி விங்கைப் பலப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ‘OPS WIN TEAM’ என்ற ஹேஸ்டேக் உடன் பன்னீரின் பழைய படங்களை சேகரித்து வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டரில் தொடர்ந்து சேர் செய்துவருகிறார்கள்.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்களில் விசாரித்தபோது, `தற்போதைய சூழலில் ஒரு கட்சிக்கு ஐடி விங் அவசியமான ஒன்று. இளைஞர்களிடம் கட்சிகுறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்க ஐடி விங்கால் மட்டுமே முடியும். அதனால்தான் ஐடி விங்கைப் பலப்படுத்தியிருக்கிறார் பன்னீர். தேனியில் மட்டும் நூற்றைம்பது பேர் ஐடி விங்கில் இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களைப் பொறுத்தவரை, மாவட்டத்துக்கு ஐம்பது பேருக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள்` என்றனர்.

paneerselvam

நேற்று தனது நாற்பதாவது திருமணநாளை கொண்டாடினார் பன்னீர்செல்வம். பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் சத்தமில்லாமல், தனது மாமனார், பள்ளி ஆசிரியர் என சிலரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆசிர்வாதம் வாங்கும் படங்கள் எதுவும் பெரிதாக வெளியே வராது. ஆனால், இந்த முறை அவற்றில் சில படங்களில் ஐடி விங் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.

மேலும், பழைய படங்கள் சிலவற்றையும் சமூக ஊடகங்களில் பரப்பிவருகிறார்கள். தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் தடபுடலான ஏற்பாடுகள் செய்து முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சியடையச் செய்தது மட்டுமல்லாமல், கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டினார் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் என்றே சொல்லலாம். மீண்டும் தனது சொந்த மாவட்டமான தேனியில் ஃபாமிர்க்கு வந்துவிட்டார் பன்னீர்செல்வம் என்று கட்சி வட்டாரங்கள் கிசுகிசுக்கும் சூழலில், மக்கள் மத்தியிலும் அந்த பேச்சுக்களைக் கொண்டு சேர்க்க ஐடி விங்கை பலப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.