”முதல்வரை பழிவாங்குகிறார் சபாநாயகர்!” - புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் அதிரடி!

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பா.ஜ.க-வை சேர்ந்த 3 பேர் நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்ட விவகாரம், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து பரிந்துரை செய்தது. ஆனால் எம்.எல்.ஏக்கள் நியமன விஷயத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும், உரிய அதிகாரம் படைத்தவரிடமிருந்து தங்களுக்கு உத்தரவு வரவில்லை என்றும் கூறிய சபாநாயகர் வைத்திலிங்கம், 3 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று விளக்கமளித்தார். அதையடுத்து, அதிரடியாக அந்த மூன்று பேருக்கும் ஆளுநர் மாளிகையில் ரகசியப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அதன்பிறகு, தங்களுக்கு சட்டமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்குமாறு மீண்டும் நியமன எம்,எல்.ஏ-க்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மனு அளித்தனர். ஆனால், அவர்கள் 3 பேரின் நியமனம் செல்லாது என்பதால், அவர்களை எம்.எல்.ஏ-க்களாக அங்கீகரிக்க முடியாது என்று மறுத்த சபாநாயகர் வைத்திலிங்கம், அமெரிக்காவில் உள்ள தனது மகனைப் பார்க்கச் சென்றுவிட்டார்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று முன் தினம் புதுச்சேரி திரும்பிய வைத்திலிங்கம் மூன்று எம்.எல்.ஏ-க்களையும் நிராகரித்து உத்தரவிட்டார்.

நியமன எம்.எல்.ஏக்கள்

அதையடுத்து, “உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பாக தலைமைச் செயலாளர் அரசாணை பிறப்பித்திருக்கிறார். இந்நிலையில், சபாநாயகர் புதிதாக ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமும் பா.ஜ.க தலைமையிடமும் புகார் செய்வோம். சட்டப்பேரவை கூடும் நாளில், கட்டாயம் அதில் நாங்கள் பங்கேற்போம்” என்று ஆவேசமாகத் தெரிவித்திருந்தனர் நியமன எம்.எல்.ஏ-க்கள் மூன்றுபேரும். வரும் நவம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், “சட்டசபை கூடும் அன்று பா.ஜ.க-வினர் பிரச்னை எழுப்பினால்,  உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுப்பார்” என்று இந்த விவகாரம்குறித்து கருத்து தெரிவித்திருந்தார், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம். உடனே அதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, “தடையை மீறி சட்டப்பேரவைக்குள் நாங்கள் நுழைவோம்” என்று தெரிவித்தனர் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலாளரைச் சந்தித்து மனு அளித்தனர், நியமன எம்.எல்.ஏ-க்கள். அதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவரும், நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன், “நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில், இந்திய இறையாண்மையையும் சட்டத்தையும் மதிக்காமல் காங்கிரஸ் கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார் சபாநாயகர் வைத்திலிங்கம். அரசை முடக்கவும் முதலமைச்சர் நாராயணசாமியைப் பழிவாங்கும் நடவடிக்கையிலும் சபாநாயகர் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!