வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (15/11/2017)

கடைசி தொடர்பு:15:10 (15/11/2017)

ரேஷனில் 30, கடைகளில் 85 ரூபாய்... உளுந்துக்குப் பதில் இதெல்லாம் பயன்படுத்தலாம்!

உளுந்து இல்லாத டிபன் ஐட்டங்கள்

வேலைக்குப் போகிற பெண்களுக்கும் சரி, இல்லத்தரசிகளுக்கும் சரி, செய்வதற்கு ஈஸியான டிபன் ஐட்டம் என்றால் அது இட்லியும் தோசையும்தான். இந்த நிம்மதிக்கு வேட்டுவைத்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். விஷயம் இதுதான், 'அரசு உளுத்தம் பருப்பைக் கொள்முதல் செய்யாததால், இனி ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது'.

ரேஷன் கடைகளில் கிலோ வெறும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிற உளுந்து, வெளி கடைகளில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி காலையும் மாலையும் உளுந்து சேர்த்துச் செய்யப்படுகிற இட்லிக்கும் தோசைக்கும் மாற்றாக என்ன செய்வது? இதோ, இங்கே உளுந்து சேர்க்காத சில சுலபமான டிபன் ஐட்டங்களைச் சொல்லித்தருகிறார் சமையற்கலை நிபுணர் லதாமணி ராஜ்குமார். 

1. இடியாப்பம் :

         உளுந்து இல்லா இடியாப்பம்   

பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி அரைத்து வைத்துக்கொண்டால், தேவைப்படுகிற நேரங்களில் சுடுநீரும், உப்பும் விட்டுப் பிசைந்து இடியாப்ப அச்சில் வைத்து இட்லித்தட்டில் பிழிந்து வேகவிட்டு எடுத்தால் இடியாப்பம் ரெடி. 

2.  உப்பு உருண்டை: 

உப்பு உருண்டை

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், ருசிக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதில் ஒரு கப் பச்சரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு, கைவிடாமல் கிளறவும். கலவைக் கெட்டியானதும் ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உப்பு உருண்டை ரெடி.

3. அடை:

அடை

 

இரண்டு கப்  பச்சரிசிக்குத் தலா ஒரு கப் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, 3 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அடை செய்வதற்கு உளுந்தே இல்லாத மாவு ரெடி. 

4. அவல்  உப்புமா: 

அவல் உப்புமா

அவலை சுத்தமான துணியால் துடைக்கவும். பிறகு, அரை கிலோ அவலுக்கு கால் கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து, தண்ணீரை மிதமாக சூடுப்படுத்தவும். இந்தத் தண்ணீரை அவலில் கொட்டி, உப்புப் போட்டு  மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து சேர்த்தால் அவல் உப்புமா பத்தே நிமிடத்தில் சாப்பிட ரெடி.

 

5. ஜவ்வரிசி உப்புமா: 

ஜவ்வரிசி உப்புமா

 

எவ்வளவு ஜவ்வரிசி எடுத்துக் கொள்கிறீர்களோ, அது மூழ்குகிற அளவுக்குச் சுடுநீரை ஊற்றி ஒன்றரை மணி நேரம் ஊறவிடுங்கள். இத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் புளித்தத் தயிரை சேர்க்கவும். வாணலியில் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து ஜவ்வரிசியைப் போட்டு, உப்புத் தண்ணீர் தெளித்து கிளறி இறக்கவும். 

6. கேழ்வரகு இடியாப்பம்: 

ராகி இடியாப்பம்

கேழ்வரகு மாவை உப்புத்தண்ணீர் விட்டுப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக வைத்தால் போதும். இப்படியே எல்லா சிறுதானியங்களிலும் செய்யலாம். 

7. கோதுமை அடை:

கோதுமை அடை

கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைவதைவிட இன்னும் சற்று தளர்வாகப் பிசையவும், இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வேகவிடவும். 

8. வெந்தயக்களி: 

வெந்தயக்களி

 

200 கிராம் பச்சரிசிக்கு ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் இதைச் சற்று கொர கொரப்பாக அரைக்கவும். 150 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கொதிக்க விடவும். கொதிக்கும்போதே அரைத்த மாவைப் போட்டு கைவிடாமல் கிளறினால், 15 நிமிடங்களில் வெந்தயக்களி வெந்து சாப்பிட ரெடியாகி விடும். 

9. கேழ்வரகு  அடை:

கேழ்வரகு  அடை

கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய். முருங்கைக்கீரை அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து பிசைந்து அடையாகத் தட்டி எண்ணெய்விட்டு  இருபுறமும் வேகவைத்தால் அடை ரெடியாகிவிடும். 

10. ஆப்பம்: 

உளுந்து குறைவாக சேர்க்கிற டிபன் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்கள், ஆப்பம் செய்யலாம். 

இட்லி, தோசைக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தேவைப்படுகிற இடத்தில் ஆப்பத்துக்குக் கால் ஆழாக்கு உளுந்துதான் தேவைப்படும்.


டிரெண்டிங் @ விகடன்