வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (15/11/2017)

கடைசி தொடர்பு:18:16 (15/11/2017)

'அன்று சாதாரண நபர்... இன்று 130 லாரிகளுக்கு ஓனர்' ஐ.டி.ரெய்டில் சிக்கிய மன்னார்குடி 'மிடாஸ்' மனிதர் #VikatanExclusive

வருமானவரி சோதனை

 மிடாஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சசிகலாவின் பினாமியாகச் செயல்பட்ட மன்னார்குடி மனிதர் சிக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த அந்த நபர், தற்போது கோடீஸ்வரனாக இருக்கிறார் என்றும் 130 லாரிகளுக்கு ஓனராக உள்ளார் என்றும் வருமானவரித்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சசிகலா குடும்பத்தினரைக் குறிவைத்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், வைரங்கள், பணம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில் தினந்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா, ஜெயா டி.வி. பொது மேலாளர் நடராஜன், ஜாஸ் சினிமாஸைச் சேர்ந்த மூன்று பேர் என விசாரணை தொடர்ந்து வருகிறது. இது, மன்னார்குடி உறவுகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து, சசிகலாவின் சகோதரர் திவாகரனிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், வருமான வரித்துறை அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஆவணங்களை வரிவிடாமல் படித்து அதிலுள்ள விவரங்கள் அடிப்படையில் விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவர்கள் அளிக்கும் பதில்களும் பதிவு செய்யப்படுகிறது. மேலும் நகைகள், வைரங்கள், பணம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் பணிகளும் நடந்துவருகிறது. பினாமி சொத்துகள் குறித்தும், வங்கிக் கணக்குகள், போலி நிறுவனங்கள் எனத் தனித்தனியாக விசாரணை நடந்துவருகிறது. இதற்கென தனித்தனி டீமாக அதிகாரிகள் செயல்பட்டுவருகின்றனர். விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

வருமானவரி அலுவலகத்தில் ஆஜராகிய கிருஷ்ணப்ரியா

இந்தச் சூழ்நிலையில் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்ட மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவர், வருமான வரித்துறையினரிடம் வசமாகச் சிக்கியுள்ளார். மிடாஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த நபர் குறித்த தகவல் வருமான வரித்துறையினருக்குக் கிடைத்துள்ளது. உடனடியாக அவர் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவரது டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், வரவு செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் லட்சக்கணக்கான பணம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதைக் கண்டுப்பிடித்த அதிகாரிகள், அதுதொடர்பாக மன்னார்குடி மிடாஸ் மனிதரிடம் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட வங்கிக்கு மிடாஸ் நிறுவனத்திடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேலான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதே என்ற கேள்வியை வருமான வரித்துறையினர் கேட்டபோது, மன்னார்குடி மனிதர் அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சர்வசாதாரணமாகப் பதிலளித்துள்ளார். அடுத்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களிடம் பணம் தொடர்பான கேள்விக்குப் பதில் இல்லாததால் மன்னார்குடி மனிதர் மூலம் சசிகலா குடும்பத்தினருக்குச் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானவரி சோதனை 

 இதுகுறித்து வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "மிடாஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில்தான் மன்னார்குடி மனிதரிடம் விசாரணை நடத்தினோம். அவர், மிடாஸ் நிறுவனத்தின் மதுபானங்களை லாரிகளில் எடுத்துச் சென்று சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இரண்டு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களை நடத்திவருகிறார். அந்த நிறுவனங்களின் கணக்கு விவரங்களில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் சில ஆண்டுக்கு முன்பு வரை பொருளாதாரத்திலும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆனால், மிடாஸ் நிறுவனத்தின் மதுபானங்களை சப்ளை செய்யும் பணி அவரிடம் ஒப்படைத்த பிறகு, அவருடைய வளர்ச்சி அசுர வேகத்தை எட்டியுள்ளது. தற்போது, அவரது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் 130-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. தொழிலைத் தொடங்குவதற்கான நிதி ஆதாரம் குறித்து அவரிடம் விசாரித்தால் எந்தப்பதிலும் இல்லை. இதனால் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. அதுபோல, சென்னை அண்ணாசாலையில் செயல்படும் மிடாஸ் நிறுவனத்திலிருந்து மதுபானங்களை சப்ளை செய்யும் மற்ற இரண்டு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் சோதனை நடத்தினோம். அந்த நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தை நடத்துபவர்கள் சசிகலாவின் பினாமிகள் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடைய வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதனால், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். இதற்கிடையில் சசிகலா குடும்பத்தினரின் பினாமிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்