வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (15/11/2017)

கடைசி தொடர்பு:16:16 (15/11/2017)

திருச்சியில் ’ரெட் அலர்ட்’ - போலீஸார் குவிந்ததால் பரபரப்பு!

இன்று காலை 10 மணியளவில், திருச்சி மாநகரில் உள்ள போலீஸாரை உஷார்படுத்தி, திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடமிருந்து உத்தரவு வந்தது.

திருச்சி போலீஸ்

அடுத்த சில மணித்துளிகளில் திருச்சி மாநகர் முழுக்க சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார், கும்பல் கும்பலாக நின்று வாகனச் சோதனையில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்நிலையில், திருச்சியில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாகவும், அதனால் போலீஸ் இப்படி உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவ, திருச்சியே பரபரக்கத் துவங்கியுள்ளது.

திருச்சியில், சமீபகாலமாக செயின்பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும், திருச்சி போலீஸாரின் தீவிர வேட்டையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில், 300 பவுனுக்கு மேலும், 3 கிலோ வெள்ளிப் பொருள்களைக் கொள்ளையடித்த திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவரை வாகனச் சோதனையில் கைதுசெய்தது.

இதேபோல, விலை உயர்ந்த பைக்குகளில் சென்று திருடிய திருச்சி தென்றல் நகரைச் சேர்ந்த அபிலாஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவர் கைதுசெய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.

செயின் பறிப்புச் சம்பவங்கள் அடுத்தடுத்து  தலையெடுக்கத் துவங்கியுள்ளது.  இதில், சில சம்பவங்களில் குற்றவாளிகளை இதுவரை பிடிக்க முடியவில்லை என திருச்சி காவல்துறை ஆணையர் வேதனைப்பட்டார். திருச்சி போலீஸார், புதிய யுக்திகளைக் கையாள்வதுடன், காலை 5 மணி முதல் ரோந்துக் காவலர்கள் பணியாற்றி வருவதுடன், இரவு எந்த வானங்களும் பாதுகாப்பு இல்லாமல் வீட்டின் முன்பக்கம் நிறுத்தக்கூடாது என நெருக்கடிகொடுத்தனர். அதோடு, திருச்சி மாநகருக்குள், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைப் பிடித்து அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்தனா்.

திருச்சி போலீஸ்

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அருண், திருச்சி முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு 'ரெட் அலர்ட்' தகவல் வந்தால், போலீஸார் அவசர காலங்களில் செயல்படுவது போன்று துரிதமாகச் செயல்படுவது குறித்து ஒத்திகை பார்க்கத் திட்டமிட்டார். அதன்படி, காலை 10 மணிக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலிருந்து தகவல் சென்று, அடுத்த சில நிமிடங்களில் திருச்சி முழுக்க, 1500 காவலர்கள் குறிப்பிட்ட இடங்களில் வந்து நின்று வாகனங்களைச் சோதனை செய்ய ஆரம்பித்தனர். இதனிடையே திருச்சியில் வேறுவிதமாகத் தகவல் பரவ, பரபரப்பு கூடியது.

திருச்சி கமிஷ்னர் அருண்

இதுகுறித்து விசாரித்ததில், ’கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால், அதைச் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள சிறப்பு காவல்படையினரை உஷார் படுத்திட உத்தரவிட்டார். அந்தச் சமயத்தில், அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகை தந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி முடிவெடுக்க உள்ளார், ஆட்சிக்கு ஆபத்து எனத் தகவல்கள் வெளிவந்தது. ஆனால், டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரனோ, சிறப்பு காவல்படையினர் சிறப்புப் பணிகள் முடித்து முகாம்களுக்குத் திரும்புவது வழக்கமான நடவடிக்கைதான் என்றார். அந்த அடிப்படையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண், திருச்சியில் அவசரகாலங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, ரெட் அலர்ட் முறையைத் துரிதப்படுத்தி உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அருண் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் திட்டமிட்டபடி அருண் இந்த ஒத்திகையை முடித்துள்ளார்’ எனக் கூறுகிறார்கள் திருச்சி போலீஸார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க