'பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்' - மத்திய, மாநில அரசுகளுக்கு கி.வீரமணி கோரிக்கை

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், முக்கியப் பகுதியைப் பதிவுசெய்யத் தவறிவிட்டோம்' என்று சி.பி.ஐ விசாரணை அதிகாரி தியாகராஜன் கூறியதன் அடிப்படையில், பேரறிவாளன் தாக்கல்செய்த சிறப்பு மனுவை ஏற்றுக்கொண்டு, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், 'பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வர வேண்டும்' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

 

பேரறிவாளன்

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன் உட்பட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடிவருகின்றனர். 18.2.2014 அன்று உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ அதிகாரியாகப் பணியாற்றி, பேரறிவாளனை விசாரித்த தியாகராஜன் தெரிவித்த தகவல் முக்கியமானது. 'தன்னால் வாங்கிக்கொடுக்கப்பட்ட பேட்டரி எந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தப்படப்போகிறது என்பது தனக்குத் தெரியாது' என்று பேரறிவாளன் கூறியதை நாங்கள் பதிவுசெய்யவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். அதுபோலவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தன' என்பதைத் தனது ஓய்வுக்குப் பின் ஒப்புக்கொண்டார்.

வீரமணி
அதைத் தொடர்ந்து பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த சிறப்பு அனுமதி மனுவில், இந்தக் காரணங்களைக் காட்டி, தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவைப்படாது. இந்த நிலையில், பேரறிவாளன் முழு விடுதலை பெறுவதற்கு முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார் என்பது வெளிப்படையாகிவிட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இப்பிரச்னையில் காட்டிய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, பேரறிவாளனை விடுதலைசெய்வதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு  தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். மாநில அரசும், மத்திய அரசும் வேறு பிரச்னைகளை இதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், பேரறிவாளனை விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!