வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (15/11/2017)

கடைசி தொடர்பு:17:50 (15/11/2017)

`நானும் ஒரு விவசாயிதான்!’ - மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!

governor

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார். 

கொங்கு மண்டலத்தில் கடந்த சில நாள்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே அமைந்துள்ள தொரவலூர் கிராமத்தில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கிராமிய மக்கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பாக 'ஒரு முகம் - ஒரு மரம்' என்ற பெயரில் மரம் நடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 7 கோடி மரங்களை நடும் முயற்சியின் முதல் படியாக தொரவலூர் கிராமத்தில் அரச மரக்கன்றை ஆளுநர் நட்டுவைத்தார். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சுமார் 2,500 மரக்கன்றுகளை நட்டனர்.

விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், `தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் 7 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும். நானும் விவசாயிதான் என்ற முறையில் இந்நிகழ்வில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.
மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு மற்றும் பசுமை பரப்பை அதிகரிக்கச் செய்தல் போன்றவை அரசின் திட்டங்களுள் ஒன்று.

தற்போதைய நகரமயமாக்கல் தண்ணீரின் தேவையை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. எனவே, மக்கள் தண்ணீரைச் சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு மழைநீர் சேமிப்பு அத்தியாவசியமாகிறது. தமிழகத்தில் பெய்யும் அதிகப்படியான மழைநீர் கடலில்தான் சென்று கலக்கிறது. எனவே, நாம் மழைநீரை சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். நாட்டின் பல முக்கிய நகரங்களில் மழைநீர் சேகரிப்புக்கு என்றே சில வரைமுறைகள் இருக்கின்றன. அதை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்கள் கிடைக்கும்’ என்றார்.