வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (15/11/2017)

கடைசி தொடர்பு:18:45 (15/11/2017)

`நன்றின்னு எங்க கைகளைப் பிடிச்சு கண்ணுல ஒத்திக்கிறாங்க!’ - கைதிகள் குறித்து நூலகர் நெகிழ்ச்சி

செய்த தவற்றை உணர்ந்து நல்வழியில் திசைதிருப்பவும் உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டு சிறையில் தனிமையில் மன உளைச்சலில் வாடும் அவர்கள் அல்லலிலிருந்து புத்துணர்வு பெறவும் கரூர் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இன்று ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
 

 

 

இந்த ஓவியப் போட்டியைக் கரூர் மாவட்ட மைய நூலகம் நடத்தியது. தாங்கள் செய்த பல்வேறு தப்புகளுக்காகத் தண்டனை பெற்ற இருபதுக்கும் மேற்பட்ட கைதிகள் கரூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்குள்ள கைதிகளுக்கு வருடாவருடம் கரூர் மாவட்ட மைய நூலக நிர்வாகம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, கைதிகளின் மன உளைச்சலைக் குறைப்பது வழக்கம். அந்த வகையில்தான் இன்று கரூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மாவட்ட நூலகர் சிவக்குமார் ஓவியப் போட்டி நடத்த ஏற்பாடு செய்தார்.

'ஓவியப் போட்டி...' என்றதும் அனைத்து கைதிகளும் ஆர்வமுடன் அதில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஓவியம் வரைய ஏதுவாக சாட்களும் பென்சில், கலர் பென்சில்கள் மற்றும் ஸ்கெட்ச்களும் நூலக நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. தலைப்பு எதுவும் வழங்காமல், எதைப்பற்றி வேண்டுமானாலும் ஓவியம் வரையலாம் என்று கைதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. முக்கால் மணி நேரம் வழங்கப்பட அனைவரும் யானை, மலை, இயற்கைக் காட்சிகள் என்று தங்கள் மனதில் தோன்றிய காட்சிகளை, உருவங்களை கற்பனை செய்து அவற்றை அச்சு அசலாக ஓவியமாகப் பிரமாதமாக வரைந்தனர். பரிசு வழங்கும் விழா திருச்சி சரக ஐ.ஜி தலைமையில் விரைவில் நடக்கும் என்று மாவட்ட நூலகர் சிவக்குமார் தெரிவித்தார்.
 


 

மாவட்ட நூலகர் சிவக்குமாரிடம் பேசினோம்...

"பிறக்கும்போது யாரும் கெட்டவர்களாகப் பிறப்பதில்லை. வளர்க்கப்படும் சூழலால்தான் தவறான பாதையில் போய் தவறு செய்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் சந்தர்ப்ப சூழலால் உணர்ச்சி வேகத்தில் தவறு செய்ய நேர்ந்துவிடுகிறது. சிறைக்கு அப்படி வருபவர்களை நாம் ஒதுக்கி வைத்து அவர்களை இன்னும் தவறு செய்ய வைக்கக் கூடாது. அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் திறமைகள் பல ஒளிந்து கிடக்கின்றன. அவர்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து புழுங்காமலும் சிறையில் தனிமையில் வாடும் அல்லலில் மனம் குமையாமலும் மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களை ஆற்றுப்படுத்த வருடாவருடம் இப்படி அவர்களுக்குப் பலவகை போட்டிகளை நடத்தி வருகிறோம்.

அந்த வகையில்தான் இந்த வருடம் ஓவியப் போட்டியை நடத்தினோம். கைதிகளும் ஆர்வமுடன் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்தனர். சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதரும் வெளியே போகும்போது மறுபடியும் தவறு செய்யாமல் இருக்கவும், புது மனிதராக மாறி நல்ல வழியில் நடக்கவும் இப்படி கலை சார்ந்த விசயங்களில் அவர்களை ஈடுபட வைப்பது பலனைப் பெற்றுத் தரும்.

ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொரு கைதியும், 'எங்களையே எங்களுக்கே அடையாளப்படுத்தும்விதமாக எங்கக்குள்ள இருக்கிற தனித்திறமைகளை ஒவ்வொரு வருடமும் இப்படிப் போட்டிகள் வாயிலாக வெளிக்கொணர வைத்து, எங்களைப் புத்தம் புதிதாக பிறக்க வைக்கும் உங்களுக்கு நன்றி'ன்னு எங்க கைகளைப் பிடிச்சு கண்ணுல ஒத்திக்கிறாங்க. கண்டிப்பாக இந்த வழிமுறை சிறை கைதிகளுக்குப் புது இறக்கையையும் புது வானத்தையும் பரிசளிக்கும்" என்றார் உணர்ச்சி மேலிட!