"தமிழர்களுக்கு வாழ்வாதாரம்... நமக்குப் பாதுகாப்பு!" – முல்லைப் பெரியாறு பற்றி கேரள அதிகாரியின் சர்ச்சை | kerala's officer says Mullai periyar dam is security threat to Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (15/11/2017)

கடைசி தொடர்பு:19:40 (15/11/2017)

"தமிழர்களுக்கு வாழ்வாதாரம்... நமக்குப் பாதுகாப்பு!" – முல்லைப் பெரியாறு பற்றி கேரள அதிகாரியின் சர்ச்சை

தென் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் மிக முக்கிய நீர் ஆதாரம் முல்லைப்பெரியாறு அணை. 1895ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகாரி ஜான் பென்னிகுவிக் தன்னலமில்லா தனது முயற்சியால் இந்த அணை கட்டப்பட்டது. முழுக்க முழுக்க தமிழகத்தின் தேவைக்காகக் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் பெற இன்று வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறது. அணையில் 142அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றும் மெயின் அணைக்கு அருகில் இருக்கும் பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 142அடி தண்ணீர் அணையில் தேக்கப்பட்டது. கடந்தவருடம் பருவமழை பொய்த்துப்போனதால் 142அடி தண்ணீர் தேக்க முடியவில்லை. ஆனால், இந்த வருடம் பருவமழை தீவிரமாக இருக்கும் சூழலில், மூவர் குழு நேற்று அணையைப் பார்வையிட்டது. இந்த மூவர் குழுவில், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குல்சன் ராஜ், தமிழகப் பொதுப்பணித்துறையின் முதன்மை அரசுச் செயலர் பிரபாகரன், கேரள நீர்வள ஆதார அமைச்சகத்தின் அரசுச் செயலர் டிங்கு பிஸ்வால் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். மதியம் வந்த அதிகாரிகள் நேராகப் படகு மூலம் தேக்கடியிலிருந்து அணைக்குப் புறப்பட்டனர். அங்கே முதலில் மெயின் அணையில் ஆய்வு செய்துவிட்டு அடுத்ததாக பேபி அணைக்குச் சென்று அங்கேயும் ஆய்வு செய்தனர். பின்னர், அணையின் சட்டர்களையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள் அனைவரும் குமுளியில் உள்ள முல்லைப்பெரியார் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அவர்களோடு தமிழக – கேரள அதிகாரிகள் சிலரும் ஆலோசனையில் பங்கெடுத்தனர்.

முல்லைப் பெரியாறு

ஆலோசித்து முடிவெடுப்போம் :

அதிகாரிகளின் நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மூவர் குழுவின் தலைவரும் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளருமான குல்சன் ராஜ் , "நான் தமிழக – கேரளத் தரப்பின் கோரிக்கைகளைக் கேட்டிருக்கிறேன். அது தொடர்பாகக் கலந்தாலோசித்தோம். அடுத்த மழைக்காலத்திற்கு முன்பாக மீண்டும் ஒரு முறை கண்காணிப்பு குழு கூடும். பேபி அணையைப் பலப்படுத்துவது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்துவோம்" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய காவிரித் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், `பேபி அணையைப் பலப்படுத்துவது மற்றும் அணைக்கு மின்சார இணைப்பு மற்றும் சாலை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வைத்தோம். கேரளா தரப்பில் சில கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்தார்கள். இரு தரப்பு விஷயங்களையும் குல்சன்ராஜ் கேட்டுக்கொண்டார். பேபி அணையை பலப்படுத்தும் முன், அணைக்குப் பின்னால் இருக்கும் 23 மரங்களை வெட்ட வேண்டும். அதற்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்` என்றார்.

முல்லைப் பெரியாறு அணை

பாதுகாப்புதான் முக்கியம் :

கேரளா மீடியாக்களுக்குப் பேட்டியளித்த கேரள நீர்வள ஆதார அமைச்சகத்தின் முதன்மைச் செயலர் டிங்கு பிஸ்வால் பேசியபோது, `நம்முடைய தரப்பில் அணையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எடுத்துக்கூறினோம். பேபி அணையை பலப்படுத்துவது தொடர்பாக தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தார்கள். பேபி அணையை பலப்படுத்தி மெயின் அணையில் 152 அடியாக தண்ணீர் தேக்குவது அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், நமக்கு அது பாதுகாப்பு பிரச்னை. நமக்குப் பாதுகாப்புதான் முக்கியம். அணையின் பாதுகாப்பில் நாம் அக்கறையோடு இருக்கிறோம். எனவே, பாதுகாப்பு சார்ந்த நம் விளக்கங்களையும் முன் வைத்திருக்கிறோம்` என்று பேசி சர்ச்சை கிளப்பினார்.

ஆரம்பம் முதலே தமிழக உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போடுவது கேரளாவின் வழக்கமாக இருந்திருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் கோரும் ஒவ்வொரு தமிழனுக்கும் அது வாழ்வாதாரப்பிரச்னை மட்டுமல்ல, உரிமையியல் சார்ந்த பிரச்னையும் கூட. இன்றுவரை பேபி அணை பலப்படுத்தல் தொடர்பாக சில கூட்டங்களும், ஆலோசனைகளுமே நடைபெற்றதே அன்றி, தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேகம் காட்டாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழாமல் இல்லை. வெற்று ஆலோசனைக் கூட்டங்களால் இதுவரை பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்றுவருடங்களைக் கடந்துவிட்ட சூழலில் உடனே பேபி அணையை பலப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close