வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (15/11/2017)

கடைசி தொடர்பு:19:20 (15/11/2017)

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உலகத்தரத்துக்கு உயர்த்தப்படும்! துணைவேந்தர் செல்லதுரை பேட்டி

உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் இலங்கை ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் பைனரி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்தார். 

 

செல்லதுரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செல்லதுரை இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரோடு பேராசிரியர் ஆண்டியப்பன், பதிவாளர் சின்னையா மற்றும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைப் பேராசிரியர்கள் உடனிருந்தனர். துணைவேந்தர் செல்லதுரை கூறுகையில், 'வருங்காலத்தில் காமராஜர் பல்கலைக்கழகம் மிகவும் பெயர்பெற்று விளங்கும் வகையில் இலங்கையிலுள்ள ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள பைனரி பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்திருப்பதால், மிகச்சிறந்த கல்வியைப்பெற மாணவர்களுக்கு வாய்ப்புகிட்டும். மாணவர்கள் அங்கு சென்று கல்வி கற்க பெரும் வாய்ப்பாக அமையும். மலேசியாவிலுள்ள தமிழ் மணிமன்றம் என்ற உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அமைப்போடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, மொரிஷீயஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளில் வாழும் தமிழர்கள், காமராஜர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாகச் சர்வதேச மாநாடுகளும் நடைபெற உள்ளன. இதில், பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். `சமூக அதிகாரப் பரவலாக்கலில் உயர்கல்வியின் தேவை' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டை இலங்கை ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்த உள்ளோம். இதுபோன்ற வாய்ப்புகளின் காரணமாகப் பல்கலைக்கழகத்தின் தரம் மேம்படும்.

மலேசியாவிலுள்ள பைனரி பல்கலைக்கழத்தில் 60 நாடுகளைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் உட்பட 4,000 பேர் பயில்கின்றனர். மேலாண்மை மற்றும் தொழில் முனைவு சார்ந்த படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 421 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது. இக்கிராமங்களில் உள்ள ஆர்வமுள்ள 2,000 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, பைனரி பல்கலைக்கழகம் வாயிலாக ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.