வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (15/11/2017)

கடைசி தொடர்பு:21:01 (15/11/2017)

கரூர் மாவட்டத்தில் 12,621 பேருக்கு வெள்ளாடுகள்! மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழக அரசின் வெள்ளாடு வழங்கும் திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் இதுவரை 12,621 பேர் பலன் அடைந்திருக்கிறார்கள் என்று அம்மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார். 

கலெக்டர் கூறும்போது, 'இதுவரை கடந்த ஆறு வருடங்களில் 12,621 பயனாளிகளுக்கு தலா நான்கு ஆடுகள் வீதம் 50,484 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவை இதுவரை 97,196 குட்டிகளை ஈன்றுள்ளன. நடப்பு நிதியாண்டில் 2,929 பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வீதம் 11,716 ஆடுகள் வழங்கப்பட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, கரூர் மாவட்டத்தில் 1,50,762 பசுவினங்களும் 40,927 எருமையினங்களும் 2,57,464 செம்மறி ஆடுகளும் 1,22,948 வெள்ளாடுகளும் உள்ளன.  

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்ட பகுதிகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவர்கள் தலைமையில் குழு முகாமிட்டு ஆடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளுக்குத் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆடுகளை நோய்த்தாக்குவது தடுக்கப்பட்டுள்ளது. 

ஆடுகளைப் பராமரிக்கவும் சிகிச்சை வழங்கவும் 66 கால்நடை மருந்தகங்களும்12 கால்நடை கிளை நிலையங்களும் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளாடுகள் வழங்கப்பட்டதன்மூலம் ஏறத்தாழ 12,621 குடும்பங்கள் நிரந்தர வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்றார்.