ரூ.2,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவன அதிபர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

 

 

தமிழக - கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்தம்பாலை எனும் இடத்தில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதிநிறுவனத்தை நிர்மலன் என்பவர் நடத்தி வந்தார். இவரது நிதி நிறுவனத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்டோர் டெபாசிட் செய்திருந்தனர். 

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகம் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப அளிக்க முடியாமல் நிர்மலன் திணறினார். தங்களது பணத்தைத் திரும்ப அளிக்குமாறு, வாடிக்கையாளர்கள் தொடர் நெருக்கடி கொடுக்கவே, அவர் தலைமறைவானார். அவர் ரூ.2,000 கோடி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாகத் தமிழகம் மற்றும் கேரள போலீஸார் இணைந்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி மீராசுமதி முன்னிலையில் அவர் சரணடைந்தார். அவரை நவம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவருக்கு, கேரள முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்குத் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகளும் எழும்பியது. இந்நிலையில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இங்கு கறுப்புப்பணம் பதுக்கி வைத்துவிட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நேரத்தில் பணத்தை நிதி நிறுவன உரிமையாளரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த நிதி நிறுவன மோசடியைக் கண்டித்து தமிழ்நாடு, கேரள எல்லை மாவட்டங்களில் கடந்த சிலநாள்களாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!