வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (15/11/2017)

கடைசி தொடர்பு:20:20 (15/11/2017)

’பாதைமாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம்’ - கவனம் ஈர்த்த கரூர் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆய்வு!

பாதை மாறிய தேனீக்களால் விவசாயம் பாதிப்பது குறித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆய்வுக்கட்டுரை மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.

கரூர் மாவட்டம், காக்காவாடி என்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான 'தேசிய குழந்தைகள் மாநாடு-2017'  நடைபெற்றது. இந்த மாநாட்டில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் ஆய்வுக்கட்டுரை வடிவில் 180 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் சிறந்த 18 படைப்புகளில் ஒன்றாக தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சதீஸ்குமார், மனோஜ், சிவிஸ், மணிகண்டன், வேல்மகேந்திர சாமி ஆகியோரின் படைப்பு தேர்வு செய்யப்பட்டது. 'பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம்' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு, டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டுக்குத் தேர்வாகியுள்ளது. வெள்ளியணை அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் தனபால் ஆலோசனையோடு இந்த ஐந்து மாணவர்கள் குழு நேரடி களப்பணியில் ஈடுபட்டு, ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரையைத் தயார் செய்திருக்கிறது.


 

இதுகுறித்து ஆசிரியர் தனபாலிடம் பேசினோம். 'ஐந்து மாணவர்களும்  டி.கூடலூர், வெள்ளியணை, கல்லுமடை, ஜெகதாபி, தாளப்பட்டி, வெங்கக்கல்பட்டி, மணவாடி ஆகிய கிராமங்களில் உள்ள 100 விவசாயிகளிடம் சென்று ஆய்வு செய்தனர். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவகை பயிர் செய்கிறார்கள், எந்த வகை தாவர மலரில் தேனீக்கள் அதிகம் தேன் அருந்த வரும். அக்காலகட்டத்தில் அத்தாவரத்தின் விளைச்சல் எப்படி இருக்கும்? தங்கள் தோட்டத்தில் எத்தனை தேன்கூடுகள் இருந்தன. தேனை எதற்காகப் பயன்படுத்தினார்கள் போன்ற வினாக்கள் மூலமாக விவசாயிகளிடம் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், தற்போது தேனீக்கள் எண்ணிக்கை குறையக் காரணமாக செயற்கை உரம், செயற்கை பூச்சிக் கொல்லி ஆகியவை உள்ளன. வேதிப் பொருள்களின் வாசனையால்தான் தேன் குடிக்க வரும் தேனீக்களின் மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தேன்கூட்டுக்குச் செல்லும் பாதை மறந்து, பாதை மாறிச் சென்று இறுதியில் இறந்துவிடுகின்றன. இன்றைய நிலையில் தேன்கூட்டையும் தேனீக்களையும் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கிட்டத்தட்ட 50 சதவிகிதம் தேனீக்கள் கடந்த 30 ஆண்டுகளில் அழிந்துவிட்டன. தேனீக்களால்தான் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று தரமான காய்கள், பழங்கள், உணவு தானியங்கள் நமக்கு கிடைக்கிறது. எனவே, செயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து இயற்கை உரம், பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தினால் தேனீக்கள் பெருகும் விவசாயம் செழிக்கும் என விவசாயிகளிடம் எடுத்துக் கூறி மாணவர்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.  

இந்த நேரடி ஆய்வின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை மாணவர்கள் 5 பேரும் மாவட்ட மாநாட்டில் சமர்ப்பித்தனர். அந்த ஆய்வுக் கட்டுரைதான் மாநில மாநாட்டுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் எங்கள் மாணவர்களின் இந்த நேரடி கள ஆய்வுக் கட்டுரையைப் பாராட்டி கரூர் வைஸ்யா வங்கி முதன்மை மேலாளர் நடராஜன் பதக்கம் அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகளும் எங்கள் பள்ளி மாணவர்களைப் பாராட்டினர். அடுத்த மாதம் சென்னையில் நடக்கும் மாநில மாநாட்டிலும் எங்கள் பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை கவனம் பெறும்’ என்றார்.