வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/11/2017)

கடைசி தொடர்பு:17:43 (09/07/2018)

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த இந்தியக் கடலோரக் காவல்படை!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்தியக் கடலோரக் காவல்படையினர் அறிக்கை வெளியிட்ட நிலையில், நடந்த சம்பவத்துக்கு மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் மண்டபம் கடலோரக் காவல்படையினர் இன்று வருத்தம் தெரிவித்தனர்.

இந்திய கடலோர காவல்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்கள்

கடந்த திங்கள்கிழமை காலை மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பல மணிநேரம் படகில் வைத்து தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு நேற்று காலை முதல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் மட்டுமே, நமது மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வந்தநிலையில், இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

 இச்சம்பவத்துக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னைக் கடலோரக் காவல்படைத் தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் மீனவர்கள்மீது தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவோ அவர்களைத் தாக்கவோ இல்லை என மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சூழலில் மண்டபம் கடலோரக் காவல்படை நிலையத்தில் உள்ள அதிகாரிகள், மீனவர்களிடையே சமாதானப் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது மீனவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காதவாறு பார்த்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், இனி மாதம்தோறும் மீனவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடக் கோரியுள்ளனர். துப்பாக்கிக் குண்டு ஆதாரத்துடனும் காயங்களுடனும் புகார் செய்த மீனவர்கள் நடக்காத செயலை நடந்ததாகச் சொல்வதாக அறிக்கை வெளியிட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் ஒரே நாளில் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.