வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (15/11/2017)

கடைசி தொடர்பு:23:00 (15/11/2017)

ஆளுநரின் ஆய்வு அதிகரிக்க வேண்டும்! ஹெச். ராஜா கருத்து

தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வு அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்துத் தெரிவித்துள்ளார்.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் கடந்த இரு தினங்கள் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கோவை காந்திபுரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் பயோ கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆளுநரின் செயல்பாடு விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆளுநரின் ஆய்வை வரவேற்றுள்ளார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது இயல்பானது, வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மத்திய அரசு திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் அதிகரித்துள்ளநிலையில் ஆளுநர் அவர்களின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.