ஓய்வுபெற்றவர்களை வைத்து டெங்குவைத் தடுக்கும் கரூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா! | karur collector plan for dengue prevention using retired persons

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (16/11/2017)

கடைசி தொடர்பு:17:10 (23/07/2018)

ஓய்வுபெற்றவர்களை வைத்து டெங்குவைத் தடுக்கும் கரூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா!

 

கரூர் மாவட்டத்தில் டெங்குவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தினமும் அதிகாலையில் ஒவ்வொரு பகுதியாக, மாவட்டம் முழுக்க விசிட் அடித்து, டெங்கு தடுப்புப் பணிகள்குறித்து அதிரடியான நடவடிக்கைகளைச் செயல்படுத்திவருகிறார். அந்த வகையில், டெங்குகுறித்த விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்த, விளம்பரப் படங்களை ஒளிபரப்பும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி வந்தாலும், ஓய்வுபெற்றவர்களை வைத்து மக்களிடம் டெங்குகுறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அரசு மற்றும் தனியார் பணிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் படித்தவர்களாகவும், விபரம் தெரிந்தவர்களாகவும், ஓய்வாகவும் இருப்பார்கள். அதோடு, 'சமூக சேவைகள் எதுவும் செய்யலாம்' என்ற சேவை மனப்பான்மையோடு இருப்பார்கள். அதனால், அப்படி கரூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களை, ஒருங்கிணைந்திருக்கும் ஓய்வுபெற்றவர்களின் சங்கங்கள் மூலமாக வரவழைத்து, அவர்களோடு சந்திப்பு நடத்தி, அவர்களை வைத்து டெங்கு தடுப்புப் பணிகள், சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களை மக்களிடம் விழிப்புஉணர்வுபடுத்தும் முயற்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இறங்கியிருக்கிறார். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில், ஓய்வூதியர்களுடனான டெங்கு தடுப்புகுறித்த ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் நடத்தினார். அப்போது அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ்...

"பல்வேறு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற நீங்கள் அனுபவசாலிகளாக இருப்பீர்கள். படித்தவர்களாக இருப்பீர்கள். டெங்குகுறித்த விவரங்களை அறிந்தவராக இருப்பீர்கள். ஏதேனும் சேவை செய்யும் ஆர்வத்திலும் இருப்பீர்கள். மேலும், உங்களது பணிக்காலத்தில் பெற்ற பல அனுபவங்களை பேரிடர் காலங்களில் எவ்வாறு மேலாண்மைசெய்வது என்பதுகுறித்து அறிவீர்கள். அதனால், உங்களது  அனுபவங்களைக்கொண்டு, டெங்கு தடுப்பு, சுகாதாரத்தின் அவசியம் ஆகிய விஷயங்கள் பற்றிய விழிப்புஉணர்வை உங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்துங்கள். உங்கள் பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் ஏதேனும் தேவைப்பட்டால், உடனே தகவல் தெரிவித்து உதவி பெற்றுக்கொள்ளலாம். அதோடு, உங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல் எதுவும் ஏற்பட்டால், தாமதிக்காமல் அவர்களை மருத்துவமனைக்குப் போகச் சொல்லி ஆலோசனைகளை வழங்க வேண்டும். உங்கள் அனைவராலும் இந்த வேலையை எளிதாகச் செய்ய முடியும். இதன் பலன் அதிகமாக இருக்கும். டெங்கு ஒழிப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் மட்டும் முழுமையாக ஈடுபட்டு செயல்படுத்த முடியாது. மக்கள் 100 சதவிகிதம் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் முழுமையாக டெங்குவை கரூர் மாவட்டத்திலிருந்து ஒழிக்க முடியும். அப்படி மக்களை 100 சதவிகிதம் ஒத்துழைப்பு தர வைக்க உங்கள் ஈடுபாட்டுடன் கூடிய சேவை, மாவட்ட நிர்வாகத்துக்கு தேவை" என்று வலியுறுத்தினார்.


[X] Close

[X] Close