‘20 மணி நேர வேலை, சம்பளமாக அடி - உதை!’ - பிஞ்சுகளைப் பிழிந்தெடுக்கும் முறுக்குக் கம்பெனிகள் | For Wages, they have been beaten to blue and death- the sad story of child labourers

வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (16/11/2017)

கடைசி தொடர்பு:15:55 (17/11/2017)

‘20 மணி நேர வேலை, சம்பளமாக அடி - உதை!’ - பிஞ்சுகளைப் பிழிந்தெடுக்கும் முறுக்குக் கம்பெனிகள்

குழந்தைத் தொழிலாளர்

‘கொத்தடிமைகளாக துன்பம் அனுபவித்துவந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர்' என்ற தலைப்புச் செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்த்துவருகிறோம். அந்த வரிசையில், 16 வயது  இசக்கிப்பாண்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)யின் சோகக் கதை இது.  

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி கண்ணன். மனைவி இறந்துவிட்டார். 3 மகன்கள். இவர்களில், மூத்தவரான அருண் பாண்டியனுக்குத் திருமணமாகிவிட்டது. அவருக்கு அடுத்தபடியாக ரத்தினப்பாண்டி, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இசக்கிப்பாண்டி என இருவரும் பதின் வயதுச் சிறுவர்கள். 

கண்ணனின் வறுமையைப் புரிந்துகொண்ட உள்ளூர் உறவினர் ஒருவர், ''குழந்தைகளை வைத்துக்கொண்டு ஏன் கஷ்டப்படுகிறாய். இவர்களை முறுக்குக் கம்பெனிக்கு அனுப்பினால் கை நிறைய சம்பாதிக்கலாம்'' என ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். அத்தனையையும் உண்மை என நம்பிய கண்ணனும், நடக்கப்போகும் விபரீதம் புரியாமல், குழந்தைகளை வேலைக்கு அனுப்ப சம்மதித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கண்ணன், ''என் மனைவி இறந்து 8 வருடங்களாகிவிட்டன. மூத்த மகனோடும் சண்டை போட்டுவிட்டதால், ரத்தினப்பாண்டியையும் இசக்கிப்பாண்டியையும் அழைத்துக்கொண்டு என் அக்கா வீட்டுக்குப் போய்விட்டேன். அங்கேயும் நிறைய கஷ்டம். கடந்த 2014-ம் வருடம் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த எங்களது உறவினர் ராஜா, என் இரு பையன்களையும் கர்நாடக மாநிலம் (பிதர் மாவட்டம்) பசவகல்யானில் உள்ள முறுக்குக் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்துச்செல்வதாகக் கூறி, என்னிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் தந்தார்.

பள்ளிக்கூடம் செல்லாமல், ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தால், மகன்களின் எதிர்காலம் பாழாய்ப்போய்விடுமே என்றெண்ணிய நானும் மனப்பூர்வமாக குழந்தைகளை வேலைக்காக அனுப்பிவைத்தேன். ஆனால், அனுப்பி சில மாதங்களில், அங்கே கொடுமைப்படுத்துவதாகச் சொல்லி ரத்தினப் பாண்டி எங்கள் ஊருக்கே ஓடிவந்துவிட்டான். பயந்துபோன நாங்கள் போன் செய்து, இசக்கிப்பாண்டியை விசாரித்தோம். அவனோ, 'நான் இங்கே நல்லாருக்கேம்பா... ஒண்ணும் கவலைப்படாதீங்க' என்று சொல்லிவிட்டதால், அதன்பிறகு அவனைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், இவனையும் அவர்கள் அடித்துக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரியவந்தது'' என்று சொன்னவர் அதற்குமேல் பேச முடியாமல் தேம்ப ஆரம்பித்துவிட்டார்.

கண்ணன்கண்ணன் அருகில் அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த இசக்கிப்பாண்டி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துப் பேசத் தொடங்கினான். ''அண்ணன் ரத்தினப் பாண்டி தப்பிச்சுப் போனதும் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார்கள். என் கை விரலை வெட்டிக் காயப்படுத்திவிட்டார்கள். வீட்டிலிருந்து அப்பா பேசும்போதும் இந்த உண்மையை எல்லாம் நான் சொல்லமுடியவில்லை. ஏனெனில், கான்ஃபிரன்ஸ் காலில்தான் நான் வீட்டுக்குப் பேசமுடியும். அந்த கான்ஃபிரன்ஸ் காலின் இன்னொரு முனையில் முறுக்குக் கம்பெனி ஓனர் ஜெயா அல்லது அவரது மகன் வினோத் ஆகியோர் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அதனால், அங்கே நடக்கிற எந்தக் கொடுமையையும் போனில் சொல்லமுடியாது. 

காலையில் நான்கரை மணிக்கே எழுந்து முறுக்கு மாவு பிழியவேண்டும். இரவு 12 மணிவரை சேவு, மிக்சர் என தொடர்ந்து ஸ்நாக்ஸ் வகைகள் செய்துகொண்டே இருக்கவேண்டும். காலையில் எழுந்திருக்கத் தாமதமாகிவிட்டால், இரும்புக் கரண்டியால் அடிப்பார்கள். இப்படி நிறைய முறை அடித்துக் காயப்படுத்தியிருக்கிறார்கள். சில நேரங்களில், அடுப்பில் கம்பியைக் காயவைத்து சூடு வைப்பார்கள்'' என்றவர் தன் கை, கால் மற்றும் தலையில் உள்ள காயங்களை நம்மிடம் காட்டினார்.

தொடர்ந்து பேசிய இசக்கிமுத்துவின் அண்ணன் அருண்பாண்டியன், ''2014-ம் வருடம் வேலைக்காக அழைத்துக்கொண்டு போனார்கள். அடுத்த ஒரு வருடத்தில் வேலைக்கான கூலி என்று 25 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு இன்றையத் தேதி வரை எந்தப் பணமும் கொடுக்கவில்லை. தம்பியை அனுப்பிவைத்துவிடுங்கள் என்று நாங்கள் கேட்டபோதெல்லாம், 'இதோ நாங்கள் கோவில் திருவிழாவுக்கு வரும்போது கூட்டிவருகிறோம். புது வீடு கட்டிமுடித்ததும் கூட்டி வருகிறோம்' என்று சொல்லி இழுத்தடித்துக்கொண்டே போனார்கள். படிப்பறிவு, மொழியறிவு இல்லாத நாங்களும் அவ்வளவு தொலைவு சென்று என் தம்பியை அழைத்துவர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தோம். இந்தநிலையில்தான், கடந்த வாரம் ஜெயாவின் மகன் வினோத் என் தம்பியின் தலையில் கம்பியால் அடித்துக் காயப்படுத்தியிருக்கிறான். வலிதாங்க முடியாமல் துடித்த இசக்கிப்பாண்டியும் அவனோடு வேலை பார்த்துவந்த மதுரையைச் சேர்ந்த பெருமாள் சாமி என்பவரும் இரவில், அங்கிருந்து தப்பித்து ஓடி ரயிலேறி சென்னை வந்திறங்கியிருக்கிறார்கள்.

அண்ணன் அருண்பாண்டியன்எங்கள் ஊருக்கு வருவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்து சுற்றிக்கொண்டிருந்தவர்களை 'இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்' அமைப்பினரும் ரயில்வே போலீசாரும் பிடித்து விசாரித்து எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இதுபோல் வெளிமாநில கம்பெனிகளில் கொத்தடிமைகளாக அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்'' என்றார்.

கர்நாடக மாநிலம் பசவகல்யான் பகுதியில் முறுக்குக் கம்பெனி நடத்திவருவதாகச் சொல்லப்படும் ஜெயா மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்... ''என் உறவுக்காரப் பையன்தான் இசக்கிப்பாண்டி. தாயில்லா பிள்ளையாச்சே என்று விளையாட்டுப் பிள்ளையாக இருந்த அவனைக் கூட்டிவந்து என் கம்பெனியில் வேலை செய்ய வைத்தேன். நாங்கள் யாரையும் அடித்துத் துன்புறுத்தவில்லை. 

வேலை நேரத்தில், சத்தமாக ரேடியோவில் பாட்டு வைத்துக் கொண்டிருந்தான் இசக்கிப்பாண்டி. அருகிலேயே மசூதி இருக்கிறது. அவர்கள் பாங்கு ஓதும் நேரத்தில் இப்படி சத்தமாக ரேடியோ வைக்கலாமா என்று கேட்டு என் மகன் அவனைக் கண்டித்தான். உடனே கோபித்துக்கொண்டு இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டான்'' என்றார்.

குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமைகள், சுமங்கலித் திட்டம் என பல்வேறு விதங்களில், ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுப்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களிடையே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமை... செய்வார்களா?


டிரெண்டிங் @ விகடன்