ஐ.டி விசாரணை வளையத்தில் சசிகலா. உளறிக் கொட்டிய குடும்ப உறவுகள் #VikatanExclusive | Sasikala family members might have put Sasikala in trouble through IT raids

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (16/11/2017)

கடைசி தொடர்பு:16:46 (16/11/2017)

ஐ.டி விசாரணை வளையத்தில் சசிகலா. உளறிக் கொட்டிய குடும்ப உறவுகள் #VikatanExclusive

வருமானவரி சோதனை

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை சசிகலாவை மையப்படுத்தியே இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, சசிகலாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில நாள்களுக்கு முன்பு சசிகலா குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை சசிகலா குடும்பத்தினருக்கும் அவர்களின் நெருக்கமானவர்களுக்கும் கடும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டாக்டர் சிவக்குமார், விவேக் ஜெயராமன், கிருஷ்ணப்ரியா, அவரது கணவர் கார்த்திகேயன், ஷகிலா, அவருடைய கணவர் ராஜராஜன் ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் முதல்கட்ட விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். அதில், முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், வைரங்கள், பணம் ஆகியவைகுறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதுதொடர்பாக விசாரித்துவரும் நேரத்தில் அடுத்த ரெய்டு இன்னும் சிலரது வீடுகள், அலுவலகங்களில் நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிடப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவு கிடைத்ததும் சோதனையில் ஈடுபட அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மன்னார்குடி குடும்ப உறவைச் சேர்ந்த ஒருவர் சில தகவல்களை உளறிக் கொட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதன்அடிப்படையில் மன்னார்குடி குடும்ப உறவுகளின் பவர்ஃபுல் நபர்களான இரண்டு பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைக்குப்பிறகு மன்னார்குடி குடும்ப உறவுகளுக்கு நெருக்கமானவர்கள் பலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. சிலர், வெளிமாநிலங்களில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா குடும்பத்தினருடன் நெருக்கத்தில் இருந்த அனைவர்மீதும் வருமான வரித்துறையினரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. அவர்களின் பழைய கணக்குகள் எல்லாம் தூசிதட்டப்பட்டுவருகின்றன.

வருமானவரி அலுவலகத்தில் ஆஜரான கிருஷ்ணப்ரியா

இதுகுறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் எங்களுக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஒவ்வொரு குழுவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணைக்கு வந்த மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்கப்பட்டன. முதல் 10 கேள்விகளுக்குச் சாமர்த்தியமாக பதிலளித்த அவர், எங்களின் 11-வது கிடுக்குப்பிடி கேள்வியால் நிலைக்குலைந்தார். சில நிமிட அமைதிக்குப்பிறகு அந்தக் குடும்பத்தின் பவர்ஃபுல் நபர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று உளறிக் கொட்டினார். அடுத்த நிமிடமே சுதாரித்த அவர், தேவையில்லாதவற்றை சொல்லத் தொடங்கினார். அதை விசாரணை அதிகாரிகள் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். அவர், சொல்லி முடித்தபிறகு அந்த பவர்ஃபுல் நபர்குறித்து மீண்டும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினோம். அதற்கு ஆதாரமிருந்தால் அவரிடம் நீங்கள் விசாரிக்க வேண்டியதுதானே என்று தெரிவித்தார். அதன் பிறகு அவரை அனுப்பிவிட்டோம்" என்றனர். 

மன்னார்குடி குடும்ப உறவின் பவர்ஃபுல் நபர்குறித்து வருமான வரித்துறை உயரதிகாரியிடம் கேட்டதற்கு, 'தற்போது அவர் சிறையிலிருக்கிறார். அதைவைத்து நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அடுத்து அவரிடம் நீங்கள் விசாரணை நடத்துவீர்களா என்று கேட்டதற்கு 'தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்' என்றார். 

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்துள்ளனர். அப்போது, ஐ.டி ரெய்டுகுறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மூலம் தினகரனுக்கும் கிருஷ்ணப்ரியாவுக்கும் திவாகரனுக்கும் சில தகவல்களை சசிகலா சொல்லியதாகக் கூறப்படுகிறது. அந்தத் தகவல்களுக்குப் பிறகு மன்னார்குடி குடும்பத்தில் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில், சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சொல்லி வைத்ததாற்போல குறிப்பிட்ட இடங்களிலிருந்து ஆவணங்கள், நகைகள், வைரங்கள், பணம் ஆகியவற்றை எடுத்தது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நமக்கு நன்றாக அறிமுகமானவர்கள்தான் தகவலை ஐ.டிக்குச் சொல்லியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் மன்னார்குடி குடும்ப உறவினர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளதாம். அந்தக் கறுப்பு ஆடு குறித்த விசாரணை நடந்துவருவதாகவும் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 


டிரெண்டிங் @ விகடன்