வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (16/11/2017)

கடைசி தொடர்பு:16:40 (16/11/2017)

ஆளுநர் ஆய்வு என்பது ஆரோக்கியமான விஷயம்தான்  - அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

கோவை மாவட்ட நிர்வாகத்தை தமிழக ஆளுநர் ஆய்வுசெய்துள்ள விஷயத்தை, தமிழக கட்சிகள் பலவும் எதிர்த்துவருகின்றநிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் மௌனமாகவும், சிலர் ஆதரித்தும் பேசிவருகிறார்கள். இந்த நிலையில், 'ஆளுநர் ஆய்வு ஆரோக்கியமானது' என்று அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
   

ஆளுநர் ஆய்வு

இன்று, மதுரை எஸ்.ஆலங்குளத்தில் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான  புதிய  வணிகவளாகத்தைத் திறக்கவந்த அமைச்சர் செல்லூர்ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தியதை எதிர்கட்சிகள் அரசியலாக்கப் பார்க்கின்றனர். ஆனால்,  ஆளுநர் ஆய்வு என்பது ஆரோக்கியமான விஷயம்தான். நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஆளுநர் ஆய்வுசெய்தால், தமிழகத்திற்குத் தேவையான பல நல்ல திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருவார்.

தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. இங்கு யார் வந்து ஆய்வுசெய்தாலும் தமிழக அரசை பாராட்டிவிட்டுதான் செல்வார்கள். மாநில சுயாட்சியை நாங்கள் விட்டுத் தர மாட்டோம். மத்திய அரசு, தமிழக மக்களுக்கு பயனுள்ள திட்டங்களைக் கொண்டுவந்தால் வரவேற்போம். எதிரான திட்டங்களைக் கொண்டுவந்தால் எதிர்ப்போம்.  அரசு போக்குவரத்துகழக சொத்துக்கள் இப்போதுதான் அடமானம் வைக்கப்படுவதுபோல பேசுவது தவறு. அவை தி.மு.க ஆட்சி காலத்திலிருந்து வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுவருகின்றது. தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துகழகம் நசுங்கியது. எங்கள் ஆட்சியில் போக்குவரத்துகழகத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளது.''என்றார்.