வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (16/11/2017)

கடைசி தொடர்பு:17:49 (16/11/2017)

நெல்லையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்!

நெல்லையில், பெண் மருத்துவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கான காரணம்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்கொலை செய்த மருத்துவர்

நெல்லை மாவட்டம் தாழையூத்து, இந்தியா சிமென்ட்ஸ் ஆலையில் பொறியாளராகப் பணியாற்றிவருபவர், முரளி. இவரது மனைவி உஷாராணி, ஒரு டாக்டர். இவர் சங்கர் நகரில் கிளினிக் நடத்திவந்தார். இவர்களுக்கு, மகனும் மகளும் உள்ளனர். மகன் சாய்பிரசாத் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார். மகள் ஸ்ரீமதி நாமக்கல்லில் உள்ள பள்ளி ஒன்றில் +2 படித்துவருகிறார். இவர்கள், இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர் குடியிருப்பில் வசித்துவருகின்றனர். 

டாக்டர் உஷாராணிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அவர், இன்று அதிகாலை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.  மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படும் எத்தில் ஆல்கஹால் திரவத்தை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்ததால், உடல் முழுவதும் வெந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல், உடற்கூறு சோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. 

கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கணவர் தன்னைச் சந்தேகப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உஷாராணி தற்கொலை செய்துள்ளார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். உஷாராணியின் தாய் ரத்தினம் அம்மாள் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்