''அலங்காரமா... அக்கறையா... ஆளுநருக்கு எது முக்கியம்?’’ - தமிழிசை செளந்தரராஜன் | "Shouldn't the governor take care on state issues?" asks Tamilisai Soundararajan

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (16/11/2017)

கடைசி தொடர்பு:17:46 (16/11/2017)

''அலங்காரமா... அக்கறையா... ஆளுநருக்கு எது முக்கியம்?’’ - தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை சவுந்தர்ராஜன்

புதுச்சேரி அரசியலுக்குள் புயலைக் கிளப்பிவருகிறார் துணை நிலை ஆளுநரான கிரண்பேடி. இந்த 'புதுச்சேரி ஃபார்முலா' இப்போது தமிழகத்துக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையிலும் இல்லாத புதுமாதிரியாக, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோடு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ளனர் தமிழக எதிர்க்கட்சியினர். 

''கவர்னர் ஆய்வை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ''ஆளும் கட்சியினரே வரவேற்கும்போது, எதிர்க்கட்சியினர் எதிர்ப்பது ஏன்'' எனக் கேள்வி கேட்டுள்ளார் தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அவரிடம் பேசினோம்....

''புதுச்சேரி ஃபார்முலா தமிழகத்துக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறதா?''

''ஒரேயொரு மீட்டிங் நடத்தியதுமே 'புதுச்சேரி ஃபார்முலா' என்று சொல்வதெல்லாம் சரியல்ல. புதுச்சேரியில் அவர் துணை நிலை ஆளுநர் என்பது எல்லோருக்குமே தெரியும். அங்கேயுள்ள அதிகாரம் யாருக்கு என்னவென்றும் தெரியும். ஆளுநர் ஒரு கூட்டம் நடத்தி, எல்லா அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் அளித்து, அமைச்சர்களும் ஒப்புதல் அளித்து, 'எல்லாம் சரியாக நடக்கிறது' என்று பாராட்டைத் தெரிவிப்பதிலும், சரியாக நடக்கவில்லை என்றால், வழிகாட்டுவதிலும் என்ன தப்பு என்பதுதான் என்னுடைய கேள்வி. 

ஆளுநர் வெறுமனே கூட்டத்தை மட்டும் கூட்டவில்லை. தெருவையும் கூட்டி ஒரு முன்னுதாரணமாகச் செயல்பட்டிருக்கிறார். ஒரு வளாகத்துக்குள் வெறும் அலங்காரமாக மட்டுமே ஒரு ஆளுநர் இருப்பது நல்லதா அல்லது அக்கறையோடும் இருப்பது நல்லதா  என்றுதான் நான் கேட்கிறேன்.''

''ஆட்சியதிகாரத்தில், ஆளுநர் தலையிடுவதை வரவேற்கும் அமைச்சரின் பேச்சு, 'தமிழக ஆளும் கட்சி, மத்திய அரசின் அடிமையாக உள்ளது' என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல் இருக்கிறதே?''

''மத்தியில் இருக்கும் ஒரு ஆளும்கட்சி மாநில அரசோடு இணக்கமாக இருப்பது தப்பா. இதில் என்ன அடிமைத்தனம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. நான் கேட்கிறேன்.... இலங்கைத் தமிழர் பிரச்னை நடந்துகொண்டிருக்கும்போது, அந்தப் பிரச்னையை தி.மு.க சரியான முறையில் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கவனத்துக்கு எடுத்துப்போகவில்லையா? 

இதுமட்டுமா.... முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை என்று எல்லாப் பிரச்னைகளுமே முடிவடையாமல் இருப்பதால்தானே இன்றைக்கும் இதுகுறித்து தி.மு.க-வினர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால், 10 வருடங்களாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு நீங்கள் அடிமையாகத்தான் இருந்தீர்களா. உங்களைவிடவா இன்றைய அ.தி.மு.க-வினர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததையெல்லாம் மக்கள் அம்னீசியாவில் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துப் பேசக் கூடாது.''

பன்வாரிலால்

''ஆளுநரின் இந்தச் செயல்பாடு 'மாநில சுயாட்சி உரிமை'யில் தலையிடுவதாக ஆகாதா?''

''மாநில சுயாட்சி என்பது என்ன. மாநில அரசோடு மத்திய அரசு இணக்கமாக இருப்பது. அந்த வகையில்தான் ஆளுநரின் செயல்பாடு அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் ஆளுநர் என்பவர், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் வெறுமனே இருந்துவிட்டுப் போவதுதான் நல்லதா?

எந்தவிதத்திலும் தமிழக ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடவில்லை. மாறாக, ஒரு விஷயத்தில் ஆளுநரே வந்து ஆய்வு செய்யும்போது, அந்த வேலையானது இன்னும் உந்துதலாக நடைபெறும். அந்தவகையில், ஒரு பணி நன்றாக நடக்கும்போது அதனைப் பாராட்டப் போகிறார்; நன்றாக நடக்கவில்லையெனில், வழிகாட்டப் போகிறார். அவ்வளவுதானே...

ஆக இந்த ஆலோசனை என்பது ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கை சார்ந்ததுதான். இதனால், தமிழக மக்கள்தான் அதிகளவில் பலனடையப் போகிறார்கள். மக்களுக்கு நல்ல விஷயம் நடப்பதற்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் ஏன் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் எனது கேள்வி''

''இப்போது காட்டப்படும் இந்த இணக்கம், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏன் காட்டப்படவில்லை?''

''மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து இந்த மூன்று வருடங்களில், முழுதாக இரண்டு வருடங்கள் ஜெயலலிதா ஆட்சியில் இல்லை. கடந்த வருடம் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். இப்போது அவர் இல்லாமல் ஒரு வருடம் ஆகப்போகிறது.''

''தமிழக எதிர்க்கட்சியினர் அனைவருமே ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்களே...?''

''சுயாட்சி என்ற பெயரில், அரசியலுக்காகவே இதனை எதிர்க்கின்றனர்; இது தமிழக மக்களின் நலனுக்கு நல்லதல்ல. ஆளுநர் ஒன்றும் அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றித் தெரியாதவர் அல்ல. தன்னுடைய ஆளுமை என்னவென்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், அரசு சாரா அமைப்பினர் சிலர் கேட்ட விஷயங்களுக்குக்கூட 'நான் இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கிறேன்' என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, 'நான் உத்தரவிடுகிறேன்' என்று சொல்லவில்லை. ஆக, அக்கறையோடு அவர் நடந்துகொள்வதை, அதிகாரக் குறையாக எடுத்துக்கொள்பவர்களைப் பற்றி என்னவென்று சொல்ல?

ஆளும் கட்சி அமைச்சரேகூட, 'கவர்னரின் இந்தச் செயல்பாடு எங்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கிறது. மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசிடம் கேட்டு வாங்கவும் இது ஈஸியாக இருக்கும்' என்றுதானே சொல்லியிருக்கிறார். 

தமிழக எதிர்க்கட்சிகளின் கருத்துகள் எல்லாமே மக்களுக்காக இல்லாமல், ஒருவகை அரசியல் சார்ந்தே இருக்கின்றன என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. 'தமிழகத்தில் முழுநேர கவர்னர் இல்லை' என்று சொன்னார்கள். இப்போது, முழுநேர கவர்னர் வந்து அக்கறையோடு மாநிலத்துக்கு வழி காட்டும்போது, 'அவர் ஏன் இதில் தலையிடுகிறார்... அவருக்கென்ன இங்கே வேலை' என்றெல்லாம் கேட்கிறார்கள்.''

கடலோரக் காவல்படை ஆறுதல்

'' 'ராமேஸ்வரம் மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தவில்லை' என்று இந்தியக் கடலோரக் காவல்படை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், மண்டபம் கடலோரக் காவல்படையினர், 'நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருப்பதை' என்னவென்று புரிந்துகொள்ள?''

''மீனவர்கள் காயமுற்றிருப்பது வருத்தமளிக்கிறது என்று நான் ட்விட்டரில் ஏற்கெனவே பதிவிட்டிருக்கிறேன். இதுசம்பந்தமாக பாதுகாப்புத் துறையிலும் விசாரணை கோரியிருக்கிறேன். மேலும் உடனடியாக அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் பேசினேன். அவரும் உடனே கடலோரக் காவல்படையிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது, 'மீனவர்கள் இரட்டைமடிவலை பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் பணியில் காவல்படையினர் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் படகும் காவல்படையினரது படகும் ஒன்றுக்கொன்று எதிர்பாராத விதமாக மோதியது. மற்றபடி மீனவர்கள்மீது எந்தவிதமான தாக்குதலும் நடத்தவில்லை' என்று விளக்கமளித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு மீனவர்கள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்ட விஷயம் மத்திய அரசுக்குத் தெரியவந்ததும், 'மீனவர்கள் போராட்டம் நடத்துவது குறித்து என்னவென்று பாருங்கள்' என உத்தரவு வந்திருக்கிறது.

இதையடுத்து, மண்டபம் காவல்படையினர் மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, 'இதுபோல் இனிமேல் நடைபெறாது' என்று உறுதிகொடுத்ததின் பேரில் போராட்டமும் கைவிடப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில், நேரடியாக மத்திய அரசை குறைகூற முடியாது. மத்திய அரசின் உத்தரவை அடுத்துதான் காவல்படையினர் சம்பந்தப்பட்ட மீனவர்களோடு பேசி ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.''

'' 'இந்து தீவிரவாதம் குறித்து வீடியோ ஆதாரம் வெளியிட்டிருக்கும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புக் கிளம்புவது சரிதானா?''

''எந்தக் கேரள முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்து 'இந்து தீவிரவாதம்' குறித்துப் பேசுகிறாரோ கமல்ஹாசன், அதே கேரளாவில் முந்தினநாள்கூட ஆனந்தன் என்ற தம்பியைக் கொன்றிருக்கிறார்கள். 

ஊழலுக்கு எதிரானவன் என்றுதானே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். சரி... தமிழ்நாட்டில் இப்போது ஊழலுக்கு எதிராக இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதே... இதற்கு ஆதரவாக ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்கிறாரா. ஏன் இப்படி சுயநலத்தோடு ஒருசார்பாக மட்டுமே பேசிவருகிறார்?'' 

 


டிரெண்டிங் @ விகடன்