Published:Updated:

`ரிங் அடித்தாலும் எடுக்க ஆளில்லை!’ - தமிழகத்தில் முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை

108 ஆம்புலன்ஸ் சேவை
108 ஆம்புலன்ஸ் சேவை

பிரைமரி சென்டர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸுகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களால் நேரடியாகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியாது.

ஆந்திராவைச் சேர்ந்த `ஜி.வி.கே எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற தனியார் நிறுவனம்தான் தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கிறது. இதற்கான கட்டுப்பாட்டு அறை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டுவருகிறது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்து 108-ஐ தொடர்புகொண்டாலும் இந்த மையத்திலிருந்துதான் பேசுவார்கள். இப்படியிருக்க, கொரோனா பாதிப்பின் வீரியத்தால் கடந்த 4 நாள்களாகக் 108 கட்டுப்பாட்டு அறை முடங்கியிருக்கிறது. பொதுமக்களால் நேரடியாகச் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை. போன் செய்தால் ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலிருந்து அந்தந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் அதிகாரியைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஓமந்தூராரில் இரவில் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸுகள்
ஓமந்தூராரில் இரவில் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸுகள்

அதே சமயம், ஆள் பற்றாக்குறை காரணமாக ஆம்புலன்ஸுகளின் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூராரில் மருத்துவ உதவியாளர் இல்லாமல் ஓட்டுநர் மூலமாக மட்டுமே 20 ஆம்புலன்ஸுகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த நடைமுறை விதிகளுக்கு எதிரானது என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே சுட்டிக்காட்டுகிறார்கள். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்த பிறகு, மருத்துவ உதவியாளர் சொன்னால் மட்டுமே ஆம்புலன்ஸை ஓட்டுநர் இயக்க வேண்டும். ஓட்டுநர்களே தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. அப்படியிருக்க, ஊழியர்கள் பணிக்கு வர அச்சப்படுவதன் காரணத்தினால், வேறு வழியின்றி ஓட்டுநர்களை வைத்தே 108 ஆம்புலன்ஸை இயக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், இதுவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு 108 அவசர ஊர்தித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி நம்மிடம், ``டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டுவந்த கட்டுப்பாட்டு சேவை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பிரைமரி சென்டர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸுகள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அழைத்தாலும் கட்டுப்பாட்டு அறையில் போனை எடுக்க ஆளில்லை. பொதுவாகவே, மூன்று ஷிப்ட்டுகளில் தலா 60 பேருக்கு மேல் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பார்கள்.

மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி
மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி

டி.எம்.எஸ் வளாகத்திலேயே தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் பணிக்கு வர அனைவரும் அச்சப்படுகிறார்கள். மேலும், தற்போது வரை 10 நாள்களுக்கான உணவுப் படியை எங்களுக்கு வழங்கவில்லை. அரசு மருத்துவர்கள் செவிலியர்களைப் போலவே எங்களையும் தனிமைப்படுத்துதல் வேண்டும்’’ என்றார்.

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில் கூறுகையில், ``உயிர்க் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியை கடவுள் கொடுத்த வரமாகப் பார்க்கிறேன். அதே சமயம், மருத்துவர்கள், செவிலியர்களை சேவைக்குப் பிறகு தனிமைப்படுத்துவதைப்போல் எங்களைத் தனிமைப்படுத்த மறுக்கிறார்கள்.

எப்போது வேண்டுமானாலும் கொரோனா தாக்கலாம் என்ற சூழலிலும் சேவை செய்கிறோம். ஆனால், பொது சுகாதாரத் துறைக்கு சலுகைகளை அறிவிக்கும்போதெல்லாம் 108 ஆம்புலன்ஸ் சேவையை மட்டும் புறந்தள்ளிவிடுகிறது தமிழக அரசு. எங்களின் அர்ப்பணிப்பை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது வேதனையளிக்கிறது. எங்களுக்குச் சம்பளம் மிகமிகக் குறைவு. இந்த நிலையில், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று இரவு பகல் பாராமல் கொரோனா பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்’’ என்றார்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில்
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில்

இதுதொடர்பாக, 108 ஆம்புலன்ஸை நிர்வகிக்கும் ஜி.வி.கே நிறுவனத்தின் தமிழக தலைமை அதிகாரி செல்வக்குமாரிடம் பேசினோம். ``கொரோனா பாதிப்பு காரணமாகக் 108 கால் சென்டரில் கொஞ்சம் பிரச்னை இருந்தது, உண்மைதான். ஒர்க்கிங் ஸ்டைலை தற்காலிகமாக மாற்றியிருக்கிறோம். பாதிப் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளோம். இன்னும் கொஞ்ச பேரை டி.பி.ஐ வளாகத்துக்கு மாற்றியுள்ளோம். பாதிப்பு களையப்பட்டு வருகிறது. இப்போது ஓரளவு சரியாகியிருக்கிறது. முழுவதுமாகச் சரியாக இன்னும் ஒரு வாரம் ஆகும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு