வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (16/11/2017)

கடைசி தொடர்பு:17:24 (16/11/2017)

ஒரு தாயாக சோனியா காந்தி என் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்..! அற்புதம்மாள் உருக்கம்

ஒரு தாயாக எனது கஷ்டங்களை சோனியா காந்தி உணர வேண்டும் என்று பேரறிவாளன் தாயர் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 


 ராஜீவ் கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் புதிய மனுத்தாக்கல் செய்திருந்தார். வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி, தான் வாங்கித் தந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், தனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தூக்குத்தண்டனையை உறுதிசெய்த முன்னாள் நீதிபதி தாமஸ், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தில் கருணை காட்டுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடந்த 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் அவர்களது தண்டனையை உறுதிசெய்த நீதிபதி என்ற முறையில், அவர்களுக்கு கருணைகாட்ட வேண்டிய தருணம் இது, என்பதால் கடிதம் எழுதியதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தாமஸ் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியின் கடிதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், '27 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகும் பேரறிவாளனை விடுவிக்க தாமதிப்பது ஏன். வாக்குமூலம் பெற்ற அதிகாரி, தீர்ப்பளித்த நீதிபதி கூறிய பிறகும் பேரறிவாளன் சிறையிலிருப்பது வேதனை அளிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போதுதான் ஒவ்வோர் உண்மையும் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒரு தாயாக என் மனதை சோனியா காந்தி புரிந்துகொள்ள வேண்டும். பேரறிவாளனை விடுவிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். பேரறிவாளனை விடுவிக்கக் கோரிய ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸூக்கு நன்றி. பேரறிவாளனை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.