ஜலரத்னா... கண்ணகி... தமிழன்னை... ஏரிச்சவாரி படகுகளும் சூழும் ஆபத்துகளும்! | Pathetic condition of Tamizhannai boat in mullai periyar lake

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (17/11/2017)

கடைசி தொடர்பு:16:35 (17/11/2017)

ஜலரத்னா... கண்ணகி... தமிழன்னை... ஏரிச்சவாரி படகுகளும் சூழும் ஆபத்துகளும்!

குளிர் மிகுந்த சூழலில் ஜாலியாக முல்லைப் பெரியாறு ஏரியில் படகு சவாரி செய்துகொண்டு ஏரிக்கரைக்கு வரும் வனவிலங்குகளை ரசிப்பதற்காக தேக்கடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். கேரள வனத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து சுற்றுலாப்பயணிகளுக்காகப் படகுகள் வைத்திருப்பது போல, தமிழகப் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக இரண்டு படகுகள் தேக்கடியில் இருக்கின்றன. ஆனால், அவை முல்லைப்பெரியாறு அணைக்கு ஆய்விற்காக வரும் தமிழக அதிகாரிகளை அழைத்துச்செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்பது வருடங்களைக் கடந்த பிறகும் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இரண்டு படகுகளுக்கு பதில், புதிதாக இரண்டு படகுகள் வாங்க 2014-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு புதிய படகு வாங்கப்பட்டது. அதற்கு தமிழன்னை என்ற பெயரும் வைக்கப்பட்டது. இன்றுவரை பயன்பாட்டிற்கு வராத தமிழன்னையின் இன்றைய நிலை மிக மோசம் என்றே சொல்லலாம்.

படகு

எம்.ஜி.ஆர் போட்ட அக்ரிமென்ட்.!

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் – கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன் ஆகியோருக்கு இடையே போடப்பட்ட மூன்று ஒப்பந்தங்களில் ஓர் ஒப்பந்தம் படகு சம்பந்தமானது. அதில், தமிழக அரசின் சார்பில் முல்லைப்பெரியாறு ஏரியில் இரண்டு படகுகள் மட்டுமே இயக்கிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அப்போது வாங்கப்பட்டதே `ஜல ரத்னா` மற்றும் `கண்ணகி` ஆகிய இரண்டு படகுகள். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளைக் கடந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இவற்றிற்கு ஓய்வு கொடுக்கும் நோக்கில் வாங்கப்பட்ட படகுதான் `தமிழன்னை`. ஆனால், தமிழன்னையை முல்லைப்பெரியாறு ஏரியில் இயக்க கேரள வனத்துறையும், கேரள அரசும் இன்றுவரை அனுமதி கொடுக்கவில்லை.

என்னதான் பிரச்னை?

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர் வனத்திற்கு மத்தியில் அமைந்திருப்பதே முல்லைப்பெரியாறு ஏரி. வன விலங்குகளில் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் குறைந்த இயங்குதிறன் இருக்கும் இஞ்சின்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 120 குதிரைத்திறன் கொண்ட இஞ்சின்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், தமிழன்னையில் பொருத்தப்பட்டிருப்பது 200 குதிரைத்திறன் கொண்ட இஞ்சின். படகிலிருந்து வெளிவரும் சத்தம் வனவிலங்குகளை அச்சுறுத்தும். இதனை அறிந்த கேரள அரசு தமிழன்னையை இயக்க அனுமதியளிக்கவில்லை. முல்லைப்பெரியாறு ஏரியின் தண்ணீரில் மரங்களின் மீதி பாகங்கள், ஆங்காங்கே மணல் குன்றுகள் இருப்பதால், படகை மெதுவாகத்தான் இயக்க முடியும். மேலும் மெதுவாக படகைத் திருப்பவும், இயக்கவும் ஏற்ற திருப்புவிசை படகிற்கு தேவை. அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட தமிழன்னையால் விபத்து அபாயம் அதிகம்.

படகு

ஆபத்தில் தமிழக அதிகாரிகள்:

முல்லைப்பெரியாறு அணை ஆய்விற்கு என இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை துணைக்குழுவும், பருவகாலங்களில் மூவர் குழுவும் வருவது வழக்கம். அந்த வகையில் முப்பதுவருட பழைமையான படகில்தான் இன்றுவரை தமிழக அதிகாரிகள் பயணம் செய்துவருகிறார்கள். இஞ்சின் மாற்ற ஏற்பாடு செய்து உடனடியாக தமிழன்னையைத் தண்ணீரில் விட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. ஆனால், படகு வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதனால்தான் இன்றுவரை தமிழன்னையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, ஒவ்வொரு முறையும் அணை ஆய்விற்கு செல்லும் தமிழக அதிகாரிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டியிருக்கிறது. தமிழக அரசு உடனே தமிழன்னை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்