வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (16/11/2017)

கடைசி தொடர்பு:11:52 (17/11/2017)

நெல்லை புவியியல் மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்தில் லஞ்சப் பரிமாற்றமா? - அதிகாரி விளக்கம்

நெல்லையில் உள்ள அரசு அலுவலகம்

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் புவியியல் மற்றும் கனிம வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் சில அரசு ஊழியர்கள் பணம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

'லஞ்சம் தவிர்த்து... நெஞ்சம் நிமிர்த்து' என்பது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் தாரக மந்திரம். ஆனால், தமிழகத்தில் செயல்படும் பல அரசு அலுவலகங்களில் 'லஞ்சம் கொடு... காரியத்தை முடி' என்பது எழுதப்படாத வாசகமாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்' என்ற வாசகம் கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும். அதோடு லஞ்ச ஒழிப்புத்துறையின் போன் நம்பர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அத்திபூத்தாற்போல சிலர்தான் லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுத்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளைப் பிடித்துக் கொடுக்கின்றனர். 95 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை முடிக்க முயற்சி செய்கின்றனர். இதுதான் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதற்கு முதல்படியாக உள்ளது. 
அரசு மருத்துவமனைக்குச் செல்பவர்களின் அனுபவங்களைக் கேட்டால் பரிதாபமாக இருக்கும். அதுபோல வருவாய்த்துறை அலுவலகங்களில் ஏதாவது ஒரு சான்றிதழ் பெற செல்பவர்கள் சில காரணங்களுக்காக அலைக்கழிக்கப்படுவதுண்டு. ஆனால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், அலுவலரைக் கவனித்தால் அடுத்த நிமிடமே காரியம் முடிந்துவிடும். குறிப்பிட்ட அரசுத் துறை அலுவலகங்களில் இதற்கென புரோக்கர்கள் உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையும் பொறிவைத்து பிடித்தாலும் மக்களும் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களும் அலுவலர்களும் திருந்துவதில்லை. 

இந்தச் சூழ்நிலையில், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் புவியியல் மற்றும் கனிம வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்சலாவண்யம் கரைபுரண்டோடுவதாகக் குறிப்பிட்டு 8 நிமிட வீடியோ பதிவு நமக்குக் கிடைத்தது. அந்த வீடியோவில், பணம் கொடுக்கும் காட்சிகளும் அதைப் பெறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அடுத்து, வீடியோவில் இடம்பெற்றுள்ள பதிவுகள் குறித்து அந்தத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்களும் அதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, இந்தத் தகவலை நெல்லையில் உள்ள புவியியல் மற்றும் கனிமவளத்துறை துணை இயக்குநர் தங்க முனியசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரிடம் வீடியோ பதிவின் முழு விவரத்தைக் கூறினோம். அதற்கு அவர், துணை இயக்குநர் அலுவலகத்தில் ரொக்கமாகப் பணம் வாங்குகிறார்களா என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். பின்னர் அவர், இந்த அலுவலகத்தில் அரசு செக், டி.டி. செல்லான் ஆகியவை மூலம் மட்டும்தான் பணம் பெறுகிறோம். நீங்கள் சொல்வதுபடி பணத்தை ரொக்கமாக வாங்கினால் அது தவறு. மத்திய அரசின் சட்டப்படி சமீபத்தில் 'மாவட்ட மினரல் பவுண்டேசன் ட்ரஸ்ட்'  தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு கனிமவளங்களை அள்ளுபவர்களிடமிருந்து 10 சதவிகிதம் அல்லது அவர்கள் செலுத்தும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ட்ரஸ்ட்டுக்காக  வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையைக்கூட டி.டி.யாகத்தான் பெறுகிறோம். மேலும் கொடிநாள் வசூல்கூட ரொக்கமாகப் பணம் பெறுவதில்லை. அலுவலகத்தில் ரொக்கமாகப் பணம் பெறுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தவரிடம் மலேசிய மணல் விவகாரம் குறித்து கேள்வி கேட்டோம். 

அதற்கு அவர், தூத்துக்குடி துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்ட மலேசிய மணல் விவகார வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கனிம வளச் சட்டத்தின்படி நாங்கள் செயல்பட்டுள்ளோம். அந்தத் தகவலை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம். மணலை சேமித்து வைக்க மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அந்த அனுமதியைப் பெறவில்லை" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர்கள், "அரசு அலுவலகங்களில் செக், டி.டி. மூலமாகத்தான் கட்டணம் செலுத்த வேண்டும். அதையும் மீறி பணம் வாங்கினால் அது லஞ்சமாகவே கருதப்படும். அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைப் பணமாக வாங்குவது சட்டப்படி தவறு" என்றனர்.   

கனிம வளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த சிலரிடம் விசாரித்தோம். "இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களில் கனிம வளங்கள் தொடர்பான எந்தவிதமான அனுமதியைப் பெற வேண்டும் என்றாலும் பணமில்லாமல் காரியம் நடக்காது. நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தாது மணல் தொழில் நடந்த சமயத்தில் அலுவலகத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். தற்போது கூட்டம் குறைந்துள்ளது. கல் குவாரி அனுமதி, மணல் அள்ள அனுமதிக்கான பாஸ் பெற முறைப்படி விண்ணப்பித்தால் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கவனித்தால் உடனே காரியம் முடிந்துவிடும். கனிமவளத்துறையில் பணம் கொடுத்தால் காரியம் முடிந்துவிடும் நிலை உள்ளது. தற்போதுகூட மலேசியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டு செல்ல முடியாததுக்குப் பின்னணியில் பல உள்விவகாரங்கள் இருக்கின்றன" என்றனர் கூலாக. 
 
 இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்களுடைய விளக்கத்தை தெரிவித்தால் அதையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.


டிரெண்டிங் @ விகடன்