சனிப்பெயர்ச்சி விழாவுக்குத் தயாராகும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்! 

டிசம்பர் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் இன்று பந்தற்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.  

நவகிரகங்களில் ஒன்றான சனி பகவான் திருநள்ளாறு தர்பாரேண்யேஸ்வரர் கோயிலில் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். இங்குள்ள நளதீர்த்தத்தில் புனிதநீராடி, சனி பகவானை வணங்கி, திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை சனிப் பெயர்ச்சி விழாவாக இத்தலத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். வரும் டிசம்பர் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.01 மணிக்கு சனி பகவான், விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்குப் பெயர்ச்சியடைகிறார்.  

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று (16.11.2017) காலை திருநள்ளாறு தர்பாரேண்யேஸ்வரர் கோயிலில் பந்தற்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தேவஸ்தான சிறப்பு அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான கேசவன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர்.  

சனிப்பெயர்ச்சி விழாநாளில் மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமைதோறும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதனால், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் தேவஸ்தான நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!