வெளியிடப்பட்ட நேரம்: 07:23 (17/11/2017)

கடைசி தொடர்பு:07:23 (17/11/2017)

சோட்டா பீம் முதல் சுஜாதா நாவல் வரை..! கலகல குழந்தைகள் புத்தகத் திருவிழா

தமிழகத்தில் முதன்முறையாக மாணவ-மாணவிகளுக்கான `தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா' கடலூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் விகடன், பாரதி புத்தகாலயம், புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை சாகித்ய அகாடமி உள்பட சிறுவர் புத்தக வெளியீட்டாளர்கள் சுமார் 40 பேர் கலந்துகொண்டு, ஒரு லட்சம் புத்தகங்களை விற்பனைக்கு வைத்தனர். ஆயிஷா இரா.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந் மு. வடநேரே தொடங்கிவைத்தார்.

புத்தகத் திருவிழா

மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சி என்றாலே விற்பனை இருக்காது என்பதை முறியடித்து, வேறு எங்கும் இல்லாத அளவில் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு விற்பனையை விறுவிறுப்பாக்கினர். மாணவர்களுக்காக, மினி திரையரங்கம், வானவியலைப் பற்றி அறியவைக்கும் மினி கோளரங்கம் மற்றும் நூலகப் புகைப்படக்காட்சி என அறிவு சம்பந்தமான பல களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விநாடி-வினா, யோகா, ஓவியம், சமையல், மாறுவேடப் போட்டி,  நடனம், பட்டிமன்றம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, குழந்தைகள் திரைப்பட விழா போன்றவை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு வருகை தந்த மாநில அறிவியல் தொழில்நுட்ப மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் அய்யம்பெருமாள், விக்ரம் சாராபாய் விஞ்ஞானி டாக்டர் ராஜசேகர், சென்னை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சி.எஸ்.ஆர் விஞ்ஞானி டாக்டர் ஐய்யப்பன், புதுடெல்லி விக்யான் பிரசார் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் வெங்கடேஸ்வரன் உள்பட பலரும் ஆராய்ச்சியாளர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடினர்.

குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி, குழந்தை எழுத்தாளர்களான `துளிர்' இதழ் ஆசிரியர் பேரா.மோகனா, `வண்ணநதி' ஆசிரியர் யூமா.வாசுகி, `சுட்டி விகடன்' ஆசிரியர் சுட்டி கணேசன், `மாயாபஜார்' சுஜாதா, `கோகுலம்' ஆசிரியர் லதானந்த் ஆகியோருக்கு, சிறார் எழுத்தாளர்கள் விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. விருது வழங்கிய எழுத்தாளர் சா.கந்தசாமி, ``யோசிப்பதை வெளிப்படுத்துவதில் சாதனை படைத்திருப்பது நம் தமிழ் மொழியே" என்றார்.

விருது பெற்ற எழுத்தாளர் சுட்டி கணேசன், ``பெற்றோர்கள், தினமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் பிள்ளைகளுக்கும் படிக்கும் பழக்கம் வரும். அவர்கள் என்ன படிக்கிறார்கள், எதைப் படிக்க விரும்புகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்து, அவர்களின் ஆற்றலை வளர்க்கும்விதத்தில் பல்வேறு புத்தகங்களை வாங்கித்தந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். படிக்கும்போதுதான் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படும். கற்பனை வளம் பெருகப் பெருக, அவர்களால் பற்பல படைப்புகளை உருவாக்கிட முடியும்.

புத்தக வாசிப்புதான் வாழ்க்கையையும் தனிமனித ஒழுக்கத்தையும் கற்றுத்தரக்கூடியது. உங்களின் வருங்காலம் ஒளிமயமாகவும், நம்பிக்கையுடையதாகவும் மலர்ந்திட நண்பனாக, ஆசிரியனாக, சகோதரனாக, வாழ்க்கை வழிகாட்டியாக, உற்ற துணையாக இருந்து உங்களை நல்வழிப்படுத்திச் செல்லும் வல்லமைமிக்கது புத்தகங்கள். `கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்' என்பதற்கிணங்க, பல்வேறு வகையான புத்தகங்களை வாசியுங்கள். அப்படி வாசிக்க வாசிக்க உங்களை உருவாக்கும் புத்தகங்கள் எது என்பதை நாளடைவில் நீங்களே அறிவீர்கள். அந்த அறிவுதான் உங்களை முழுமனிதனாக்கும்" என்று பேசி மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை மேம்பத்தினார்.

எழுத்தாளர் `மாயாபஜார்' சுஜாதா, ``குழந்தைகளைப் பற்றி எழுதவேண்டுமானால், முதலில் நாம் குழந்தைகளாக வாழ வேண்டும். அப்போதுதான் அதில் வெற்றியடைய முடியும். இந்த விருதுமூலம் கிடைக்கும் பணத்தை, ஏதாவது ஓர் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கி கொடுக்கப் பயன்படுத்துவேன்" என்றார்.

எழுத்தாளர் லதானந்த், ``முதலில் எழுத்துப் பிழையில்லாமல் எழுத வேண்டும். அதுதான் முக்கியம். ஊடகங்களுக்குப் போனால் பணப் பிரச்னை ஏற்படும் என எண்ணுகிறார்கள். அது உண்மையல்ல. நன்றாக எழுதத் தெரிந்தால் சம்பளம் கொடுக்க எத்தனையோ நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன. ஊடகத் துறைக்குள் வந்தால்தான் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும். அதனால், ஊடகத் துறைக்குள் நுழைய முயலுங்கள்" என்றார்.

எழுத்தாளர் யூமா.வாசுகி, ``சோவியத் இலக்கியங்களை குழந்தைகள் எளிதாக வாசிக்கும்படி கொண்டுவர வேண்டும். குழந்தைகளைக் கவரவேண்டுமானால், குழந்தைகள் மாதிரியே எழுத வேண்டும்" என்றார்.

எழுத்தாளர் பேரா.மோகனா, ``மூடநம்பிக்கைகளை மாற்றி விஞ்ஞானச் சிந்தனைகளை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்" என்றார்.

புத்தகதிருவிழா

இந்தப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்ட மாணவர்கள், ``இதுவரை அறிவியல், வரலாறு, இலக்கியம் எனத் தனித்தனிப் புத்தகக் கண்காட்சியைத்தான் பார்த்திருக்கிறோம். இவை அனைத்தையும் ஒன்றுசேர பார்த்தது இங்குதான். குழந்தைகள் உலகமான சோட்டா பீம் முதல் பெரியவர்களின் சுஜாதா நாவல் வரை நூல் வரிசைகளை ஒரே இடத்தில் பார்த்தது, எங்களைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்