மின்மீட்டர் கொள்முதலில் முறைகேடு இல்லை! - அமைச்சர் தங்கமணி விளக்கம்

மின்மீட்டர் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி


உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேபிடல் பவர் சிஸ்டம் என்னும் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் தாங்கள் ஒரு மின்மீட்டர் ரூ.453-க்கு வழங்குகிறோம் என்று குறைந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கியும், ரூ.495-க்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கிய வேறொரு நிறுவனத்துக்கு மின்மீட்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வழங்கிவிட்டதாக அந்நிறுவனம் புகார் கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மின்மீட்டர் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை விதித்தது. 

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ’மின்மீட்டர் கொள்முதலில் எந்த முறைகேடும் இல்லை. இன்னும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் ரூ.600-க்கு கொள்முதல் செய்யப்பட்ட மின் மீட்டர், இப்போது குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரும் மின்வெட்டை உருவாக்கிய தி.மு.க-வின் செயல் தலைவர்  ஸ்டாலின் இதை விமர்சிக்கிறார் என்று கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கேபிடல் பவர் சிஸ்டம் நிறுவனத்தின் மின்மீட்டர் தரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மீது அவதூறு பரப்பி வருகிறது. மின் மீட்டர் கொள்முதல் ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி செய்யப்பட்டபிறகு, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ரூ.495-க்கு மின் மீட்டர் கொள்முதல் செய்தால் நஷ்டம் ஏற்படும் என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!