வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/11/2017)

கடைசி தொடர்பு:08:08 (17/11/2017)

’கருணாநிதியின் குரல் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும்’- நெகிழ்ந்த அ.தி.மு.க. தோழமைக் கட்சி எம்.எல்.ஏ-க்கள்

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சி எம்.எல்.ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

 

உடல்நலக் குறைவால் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருணாநிதி உடல்நிலை தேறிவரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் தினத்தந்தியின் பவளவிழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடியும், கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார். 

இந்தநிலையில், அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சி எம்.எல்.ஏ-க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர். பத்து நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, ’உடல் நலன் குன்றி, தற்போது அதிலிருந்து மீண்டுவரும் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்தோம். நாங்கள் சென்றவுடன் எங்களை எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் என்று கூறியவுடன், உதடு சுளித்து எங்களை வரவேற்றார். தொடர்ந்து எங்களைப் பற்றி அவரிடம் கூறியதைத் தலையசைத்து கேட்டுக்கொண்டார் கருணாநிதி.

ஒருகட்டத்தில் எங்களோடு கைகொடுத்து மகிழ்ந்தார். நாங்கள் புறப்படுகிறோம் என்று சொன்ன நேரத்தில் கையை உயர்த்தி எங்களுக்கு வாழ்த்துச் சொன்னார். இந்தச் சந்திப்பு என்பது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமானது, பாசத்தின் அடிப்படையிலானது. இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவுமில்லை. இந்தச் சந்திப்பு எங்களுக்கு உற்சாகத்தையும், நெகிழ்ச்சியைத் தருவதாகவும் இருந்தது. கருணாநிதி முழு உடல்நலம் பெற்று, அவரது குரல் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’ என்றார்.