வெளியிடப்பட்ட நேரம்: 00:31 (17/11/2017)

கடைசி தொடர்பு:10:14 (17/11/2017)

நாங்க சுற்றுலாப் பயணிகள் அல்ல... ரயில்வே பணியாளர்கள்!

இவர்கள், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க  வந்த சுற்றுலாப் பயணிகள் அல்ல. சேலம் ரயில்வே கோட்டத்தில் பணி அமர்த்தப்பட்டிருக்கும் ரயில்வே தண்டவாளப் பராமரிப்புப் பணியாளர்கள்.

இவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வெயில் தாக்கத்திலிருந்தும் மழைத் தூரல்களிலிருந்தும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இந்த ஆடை அணியும் உத்தியைக் கையாள்வதாகச் சொல்கிறார்கள்.

இதுபற்றி அவர்களில் ஒருவரான வனிதா, '' நாங்க விசிட்டர்ஸ் கிடையாது. லேபர்ஸ். நாங்க, கேரள மாநிலத்தைச்  சேர்ந்தவர்கள். குரூப் 4 தேர்வு எழுதி தென்னக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். சேலம் கோட்டத்தில் பணியாற்றிவருகிறோம். பணியின்போது எங்களுக்கான சீருடை, கையுறை, காலுறை போன்றவற்றை ரயில்வே நிர்வாகமே கொடுக்கிறார்கள். அதை அணிந்துகொள்கிறோம்.

வெயில் காலத்தில், வெயிலில் தாக்கத்தால் வேலைசெய்ய முடியாமல் எளிதில் சோர்வடைந்துவிடுகிறோம். மழைக் காலங்களில் மழையில் நனைந்துகொண்டு வேலைபார்த்தால், உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் என்பதால், தலையில் கட்டிக்கொள்ளும் குடைகளை வாங்கி கட்டிக்கொள்ளுகிறோம். தமிழகத்தில் உள்ள பெண்கள் துண்டு, சீலை போன்றவற்றைத் தலையில் கட்டிக் கொள்கிறார்கள். அது, எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று தெரியவில்லை.

ஆனால், நாங்கள் கட்டிக்கொள்ளும் இந்தக் குடையால், எங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் எங்களைப் பாதுகாக்கிறது என்ற ஒரே நோக்கத்துக்காக இதை கட்டிக்கொள்கிறோம். இந்தக் குடைகள், கேரளாவிலும் சேலத்திலும் கிடைக்கிறது. ஒரு குடை, கம்பெனியைப் பொறுத்து 250 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது'' என்று தெரிவித்தபடி பணியைப் பார்க்கக் கிளம்பினார்.