ஆறுகள் இணைப்புத் திட்டம்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க, ஆறுகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உரிய எதிர் மனுதாரர்களை இணைக்கக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்தது.
 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு தாக்கல்செய்திருந்தார். அதில், `பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை முறையாக சேமிக்காததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விவசாயத்துக்குப் போதிய நீர் இல்லாததால், விவசாயிகள் பலர் தற்கொலைசெய்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரே ஆதாரம். அதை முறையாக சேமிக்காததால், தண்ணீருக்காக கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கவேண்டி உள்ளது. தமிழகத்திலிருந்து 300 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஆனால், தமிழகத்தின் தேவை 190 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே. தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கக் காரணம், அணைகள் இல்லாதது மற்றும் நதிகளை இணைக்காததே. தமிழகத்தில் இருக்கும் காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி, வைப்பாறு, குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால், அதிகப் பயன் கிடைக்கும்.15 கோடி ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலை உருவாகும். 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். 70 கோடி பேர் வேலைவாய்ப்புப் பெறுவர்.

மதுரை உயர் நீதிமன்றம் 

 

 அதேபோல மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழலும் தடுக்கப்படும். நதிகள் இணைப்பால், ஏற்கெனவே ஆந்திர மாநிலம் அதிக நன்மையைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் நதிகளை இணைப்பதுகுறித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை நபார்டு முன்பாக கோரியுள்ளார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. நதிகளை இணைக்கத் தவறினால், விவசாயம் செய்ய இயலாத நிலை உருவாகும். ஆகவே, தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைப்பதுகுறித்த எனது மனுவைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க கேபினட் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு, வழக்கில் உரிய எதிர் மனுதாரர்களைச் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!