சாயல்குடி அருகே இறந்து கரை ஒதுங்கிய அரியவகை திமிங்கிலம்!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடல்பகுதியில், திமிங்கிலம் ஒன்று காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கியது.

மன்னார் வளைகுடா பகுதி, கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இந்த கடல் பகுதியில், 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. கடல் மாசு, பருவ நிலை மாற்றம் போன்றவற்றிலிருந்து இந்த உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில், தேசிய கடற் பூங்காவாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூக்கையூர் கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

இந்நிலையில், இந்த கடல்வாழ் உயிரினங்கள் சில அவ்வப்போது இறந்து கரை ஒதுங்குவது வழக்கமாக இருந்துவருகிறது. சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைப் பகுதியில், நேற்று அரியவகை 'அம்மணி உழுவை' வகையைச் சேர்ந்த திமிங்கிலம் ஒன்று காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மீனவர்கள், மன்னார் வளைகுடா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். கறுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்பட்ட இந்தத் திமிங்கிலம், ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக்கூடியது. கப்பலிலோ அல்லது பாறையில் மோதியோ இந்தத் திமிங்கிலம் இறந்திருக்கலாம் எனவும், தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போதும் இதுபோன்ற பெரிய மீன் இனங்கள் திடீர் இறப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது எனவும் வனத்துறையினர் கூறினர். தகவலறிந்து வந்த மன்னார் வளைகுடா வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட திமிங்கிலம், பின்னர் கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!