பேருந்து நிலையத்தில் கிடந்த மர்மப் பெட்டி... பதற்றமடைந்த திருப்பூர் பயணிகள்! | Mystery suitcase at Tirupur bus stand creates chaos

வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (17/11/2017)

கடைசி தொடர்பு:08:51 (17/11/2017)

பேருந்து நிலையத்தில் கிடந்த மர்மப் பெட்டி... பதற்றமடைந்த திருப்பூர் பயணிகள்!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பெட்டியால் பல மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில், கோயம்புத்தூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியின் அருகில், தமிழ்நாடு அரசின் அம்மா குடிநீர் விற்பனையகம் அமைந்துள்ளது. அதன் பின்பகுதியில், கோவை செல்லும் பயணியர் அமரும் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளின் அருகிலேயே நேற்று மாலை முதல் மர்மப் பெட்டி ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. தொடர்ந்து பல மணி நேரம் வரை யாரும் அந்தப் பெட்டிக்கு உரிமை கோரி வராததால், அச்சமடைந்த நபர்கள், உடனடியாக மாநகர காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அங்கு கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பெட்டிகுறித்து ஆய்வில் இறங்கினர். அந்தப் பெரிய சைஸ் மர்மப் பெட்டியின் உள்ளே அதிகளவு எடையுள்ள பொருள்கள் இருப்பதுபோல தோன்றியதால், சந்தேகமடைந்த காவல்துறையினர், அதை அங்கிருந்து பாதுகாப்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்துக்கு எடுத்துச்சென்றனர். பின்னர், அந்த மர்மப் பெட்டியை வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த திடீர் சம்பவத்தால், திருப்பூர் மாநகரப் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த பயணியர் பலரும் பதற்றமடைந்தனர்.