பல்கலைக்கழக மாணவருக்கு பாலியல் தொல்லை... புதுச்சேரியில் பகீர் சம்பவம்..!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்மக் கும்பலை, காவல்துறை வலைவீசித் தேடிவருகிறது.

பாலியல் தொல்லை

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவருகிறது, மத்திய பல்கலைக்கழகம். இங்கு, புதுச்சேரி மாணவர்கள் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். தவிர, வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர். தங்கிப் படிக்கும் மாணவிகளை மிரட்டுவதும் அவர்களுக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுப்பதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறிவருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் 14-ம் தேதி, பல்கலைக்கழக விடுதியில் தங்கிப்படிக்கும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வளாகத்துக்கு வெளியில் உள்ள கடைக்குச் சென்று திரும்பியிருக்கிறார். அப்போது திடீரென்று வழிமறித்த 4 பேர் அடங்கிய மர்மக் கும்பல் ஒன்று, அந்த மாணவரை மிரட்டி, இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

அங்கு, அவருக்கு பாலியல்ரீதியில் தொல்லைகொடுத்த அந்தக் கும்பல், ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதற்கு அந்த மாணவர் மறுப்பு தெரிவித்ததால், அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது அந்தக் கும்பல். தன்னிடம் பணம் இல்லை என்று சொன்ன அவரின் செல்போனைப் பிடுங்கிக்கொண்டு, “பணத்தைக் கொடுத்துவிட்டு போனை வாங்கிக்கொள்” என்று தெரிவித்திருக்கிறது. அதற்கு, ”விடுதிக்குச் சென்று பணத்தைத் தருகிறேன் வாருங்கள்” என்று சொல்லி, அந்த மர்மக் கும்பலை அழைத்துச்சென்றிருக்கிறார் அந்த மாணவர். விடுதிக்கு அருகில் சென்றதும் மாணவரிடம் போனைக் கொடுத்த அந்தக் கும்பல், ”பணத்தை எடுத்து வா” என்று சொல்லி காத்திருந்திருக்கிறார்கள். அப்போது உள்ளே சென்ற மாணவர், கூச்சல்போட்டு சக மாணவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். அதைப் பார்த்த அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டது. இந்தச் சம்பவம்குறித்து காலாப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கடந்த நவம்பர் 15-ம் தேதி, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறி, மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பல்கலைக்கழக வளாகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!