ஜல்லிக்கட்டை ஆதரித்துப் பேசிய காவலர்: ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராகக் கடும் விமர்சனம் | action against jallikattu supporting cop arises to be a serious issue

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (17/11/2017)

கடைசி தொடர்பு:09:20 (17/11/2017)

ஜல்லிக்கட்டை ஆதரித்துப் பேசிய காவலர்: ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராகக் கடும் விமர்சனம்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது அந்நிகழ்வுக்கு ஆதரவாகப் பேசிய காவலர் மீது பத்து மாதங்களுக்குப் பின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்துவருகிறது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் கடந்த ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சீருடையுடன் பேசிய காவலர் மதியழகன் 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும். மேலும், தமிழர்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்துக் காவலர்களுக்குமே இதேபோன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார். அவரை இளைஞர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடினர்.

இந்தநிலையில், காவலர் மதியழகன்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவரும் மதியழகனுக்கு விசாரணை முடியும்வரை பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக இளைஞர்கள் பலர் குரல் கொடுத்து உதவுகின்றனர். காவல்துறையினரில் சிலரும் மதியழகனுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.