வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (17/11/2017)

கடைசி தொடர்பு:17:31 (17/11/2017)

மத்திய அரசால் வீழ்ந்த ஜவுளி ஏற்றுமதி, ஜெர்மனி கண்காட்சியில் நிமிருமா?

ஜவுளி உற்பத்தியில் கரூர் மாவட்டம் பிரசித்திபெற்றது. இங்கு தயாராகும் மேஜை விரிப்புகள், டவல்கள் போன்றவை ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தத் தொழிலை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்களும், 500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களும் உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரியால், கரூர் ஜவுளி வர்த்தகமும் ஏற்றுமதி வர்த்தகமும் நலியத் தொடங்கியிருப்பதாக கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஜவுளி

``எல்லாவற்றையும்விட, 500 கோடி ரூபாய் வரையிலான ஏற்றுமதி வர்த்தகத்துக்கு மத்திய அரசின் கிடுக்கிப்பிடிகள் வேட்டுவைத்திருக்கின்றன'' என்று அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்தச் சூழலில், ஜெர்மனி நாட்டில் நடக்கும் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு வர, 150 பேர்  ஜெர்மனிக்குச் செல்வதற்கு, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அத்துடன், ``அந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டால், எங்களுக்கு 500 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எப்படியும் நமது உற்பத்தியின் தரத்தை அங்கே நிலைநாட்டி, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஆர்டர்களை வாங்கிக்கொண்டுதான் இந்திய மண்ணில் காலடி எடுத்துவைப்போம். மத்திய அரசு ஜவுளி ஏற்றுமதிக்கு வெட்டிய குழியை, ஜெர்மனியில் பெறும் லம்ப்பான ஆர்டர்களைக் கொண்டு மூடுவோம்!" என்று சந்தோஷமாக சவால்விடுகிறார்கள் கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள்.

 இதுபற்றி நம்மிடம் பேசிய, கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன்பாபு, ஜவுளி

``ஆண்டுதோறும் ஜெர்மனி நாட்டில் ஜனவரி மாதம் உலக அளவில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சி நடைபெறும். வரும் ஜனவரி 9 முதல் 12-ம் தேதி வரை நடக்கவுள்ள இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, 150  ஏற்றுமதியாளர்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அங்கு நடக்கும் கண்காட்சியில், தங்களது  உற்பத்திகளைக் காட்சிக்காக வைப்பது உண்டு. திரைச்சீலைகள், குஷன்ஸ், மெத்தை விரிப்புகள், சமையல் அறையில் பயன்படுத்தக்கூடிய உடைகள், துண்டுகள் உள்ளிட்டவற்றில் புதுப்புது ரகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கரூர் ஜவுளிக்கு வெளிநாடுகளில் தனி மவுசு உண்டு. உலக நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக ஆர்டர்கள் கிடைக்கும். இந்த முறை கரூருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கிடைக்கும் என நம்புகிறோம். ஆர்டர் பெற்றபிறகு, நிறுவனங்களுக்குக்  குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக ஏற்றுமதி செய்யப்படும்.

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை கொண்டுவந்து எங்கள் வயிற்றில் அடித்தது. இதனால் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இருபது சதவிகிதம் வரை குறைந்தது. இந்நிலையில்தான், மத்திய அரசு எங்களுக்கு வழங்கிவந்த ஊக்கத்தொகையை ஏழு சதவிகிதத்திலிருந்து இரண்டு சதவிகிதமாக குறைத்துவிட்டது. `ஊக்கத்தொகையை பழையபடி அதிகரித்துத் தாருங்கள். இல்லையென்றால், ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும்' என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இது எங்களுக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தியது. அத்துடன், ஜவுளி ஏற்றுமதி செய்வதில் புதிய நடைமுறையைக் கொண்டுவந்து, எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் மெள்ள மெள்ள அழிவை நோக்கித் தள்ளப்பட்ட நிலையில்தான், ஜெர்மனி ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. மத்திய அரசால் அழியத் தொடங்கிய ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை, ஜெர்மனி ஆர்டரால் மீட்டெடுப்போம்!" என்றார் உற்சாகமாக!


டிரெண்டிங் @ விகடன்