வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (17/11/2017)

கடைசி தொடர்பு:16:55 (17/11/2017)

இந்த ஆண்டு சம்பா சாகுபடி சாத்தியமா? - வேதனையில் கடலூர் டெல்டா விவசாயிகள்

`இந்தாண்டு சம்பா சாகுபடி உறுதி செய்ய முடியுமா' என்ற கேள்வியை மாவட்ட ஆட்சியரிடம் வேதனையோடு முன்வைத்திருக்கின்றனர் கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள். 

விவசாயிகள் கூட்டம்

இதுகுறித்து இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பேசிய கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன், 'தென்மேற்குப் பருவமழையின் மூலம் கிடைக்கும் மழைநீர் மற்றும் காவிரி நீர் ஆகியவற்றின் மூலம் மேட்டூர் அணை நிரம்பி, தமிழக காவிரி டெல்டாவில் குறுவை மற்றும் சம்பா என இருபோக சாகுபடி பணிகளுக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதும் சாகுபடி முடித்து ஜனவரி 28-ம் தேதி அணையை மூடுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு அனைத்துப் பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் காலத்தில், நாங்கள் சாகுபடி தொடங்குவது வழக்கம். வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது மழைநீரைப் பயன்படுத்தி சாகுபடி பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.

விவசாயிகள்

வடகிழக்குப் பருவமழை முடிந்து பற்றாக்குறை ஏற்படும் காலத்தில், தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைப் பெற்று அறுவடைப் பணிகளை முடிப்பது வழக்கம். தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் துவங்கி மேட்டூர் அணை 96 அடியை எட்டியுள்ள நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி கல்லணைத் திறக்கப்பட்டது. அக்டோபர் 26-ம் தேதி கீழணைத் திறக்கப்பட்டது. நவம்பர் 10-ம் தேதி வீராணம் திறக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் டெல்டா பகுதிகளில் சாகுபடிப் பணிகள் முழுமையடையவில்லை. இப்போது நாற்றங்கால் பணி தொடங்கும் நிலையில் மார்ச் மாதம் வரை பாசனத்துக்குத் தண்ணீர் விநியோகிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 கன அடியாக உள்ள நிலையில், கடலூர் மாவட்ட டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு உத்திரவாதம் இல்லை. தமிழக அரசும் வீராணம் ஏரி நீரை சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்திக்கொள்ளும். அரசின் அந்த அக்கறை வீராணம் ஏரி, ஆயக்கட்டு விவசாயிகள் மீது இருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளால் சம்பா சாகுபடி செய்ய முடியும்’ என்றார்.