சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது! | Madras Hc upholds two years sentence awarded to M Natarajan by CBI court

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (17/11/2017)

கடைசி தொடர்பு:17:09 (17/11/2017)

சசிகலாவின் கணவர் நடராசனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது!

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

nadarajan
 

சசிகலாவின் கணவர் நடராசன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராசன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் நடராசன், அவரின் உறவினர் வி.என்.பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் யோகேஷ், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஸ்ரிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்தது. இதனிடையே ,சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக அமலாக்கத்துறையும், தனியாக நடராசன் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2010-ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து நடராசன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  

அந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் நடராசனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடராசனுக்கு, சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது அ.தி.மு.க வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க