’தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கோவையில், தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.

விஜயபாஸ்கர்

முன்னதாகக் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’கோவை அரசு மருத்துவமனையில் நான்கு பேருக்கு சிறப்பான முறையில் இதய மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு 'ஜெய்க்கா' என்கிற திட்டத்தின் கீழ் ரூ.286 கோடி நிதி வழங்கப்பட்டு சிறப்பு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ் படிக்காமல் சித்தா, ஆயுர்வேதம் படித்துவிட்டு மருத்துவம் பார்ப்பவர்களைக் கண்காணித்து வருகிறோம். உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 23 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், 837 செல் கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் குறித்து 32 விநாடிகளில் அறிய முடியும் என்றார்.

விஜயபாஸ்கர்

பின்னர், தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயபாஸ்கர், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல் மற்றும் சாதாரண காய்ச்சல் வார்டுகளைப் பார்வையிட்ட விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்டம் மூலம் மக்களின் சுகாதாரம் பேணிக்காக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவது கட்டமாக இந்தத் திட்டத்துக்காக, உலக வங்கி தமிழக அரசுக்கு ரூ.2,600 கோடி வட்டியில்லா கடன் வழங்க உள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையைப்போலவே கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குழந்தை இறப்பு சதவிகிதம் 19 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் குழந்தை இறப்பு விகிதம் 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது’ என்றார்.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் ஆய்வு செய்துகொண்டிருக்கும்போது, செவிலியர்கள் பற்றாக்குறையால் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாகக் காலிப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் அவரிடம் வலியுறுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!