வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (17/11/2017)

கடைசி தொடர்பு:17:17 (17/11/2017)

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்..! விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படைத் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 13-ம் தேதி இந்தியக் கடலோரக் காவல்படைத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேலும், அவர்களைக் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மீனவர் நல அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையைக் கேட்ட நீதிபதிகள், 'துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி அந்தஸ்துள்ள அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்கள் இழப்பீடு கோரும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.