வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (17/11/2017)

கடைசி தொடர்பு:17:44 (17/11/2017)

சிறைக்குச் செல்வாரா நடராசன்? - உச்சகட்ட பதற்றத்தில் சசிகலா உறவுகள்

சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராசனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நடராசன் கைது செய்யப்படுவாரா. நடைமுறை என்ன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷிடம் பேசினோம்.

natarajan

 

அவர் கூறியதாவது...
”சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நடராசனுக்கு விதித்த 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இந்த உத்தரவு நகல், இவ்வழக்கை ஏற்கெனவே விசாரித்த சி.பி.ஐ கீழ் நீதிமன்றத்துக்குச் செல்லும். அந்த நீதிமன்றம் உயர் நீதிமன்றம் அனுப்பிய உத்தரவின் பேரில் நடராசனுக்கு சம்மன் அனுப்பும். அந்தச் சம்மனில் உங்களுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களைக் கைது செய்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இது இன்றே நடக்காது.

advocate
 

நாளை, நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதால் நீதிமன்றங்கள் விடுமுறை. இதனால் திங்கள்கிழமைக்குப் பிறகுதான் இந்த நடவடிக்கைகள் தொடங்கும். இதற்கிடையில் திங்கள்கிழமை நடராசன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும் உயர் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் சேர்த்து மனுத்தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்கலாம் அல்லது ‘மேல்முறையீட்டு வழக்கை நாங்கள் விசாரிக்கிறோம் அதுவரை நடராசனைச் சிறையில் அடைக்கலாம்’ என்று உத்தரவிடலாம்.

தற்போது நடராசனுக்கு உடல்நிலை சரியில்லாமல், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்துள்ளதால், அதிகப்பட்சம் இதைக் கருத்தில் கொண்டு தண்டனைக்கு இடைக்கால தடை வழங்க வாய்ப்புள்ளது. அப்படியில்லை என்றால் சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சிறையிலேயே மருத்துவ வசதி பெற்றுக்கொள்ள உத்தரவிடப்படலாம். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திங்கள்கிழமை தொடங்கும்” என்றார். 

நடராசன் உடல்நிலை தேறி வரும் நிலையில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சசிகலா உறவினர்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க