ஒரே போன்காலில் ரூ.31 ஆயிரத்தை இழந்த புதுக்கோட்டை இளைஞர்! வங்கி அதிகாரிபோல் பேசி நூதன மோசடி

புதுக்கோட்டை அருகே வங்கி அதிகாரிபோல் பேசி இளைஞர் ஒருவரின் கணக்கிலிருந்து ரூ.31,582 மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. 
 

 

புதுக்கோட்டை அருகில் உள்ள அரிமளம் கிராமத்தைச் சேர்ந்தவர், தமிழ்ச்செல்வன்.இவருக்கு சில நாள்களுக்கு முன்னர், போன் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில் பேசிய மர்ம நபர், 'நான் சென்னையில் உள்ள இந்தியன் வங்கி மேனேஜர் பேசுகிறேன். உங்களுடைய ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். தவறினால், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க முடியாது. எனவே, ஏ.டி.எம் கார்டு எண், தேதி, பின் நம்பர், சி.வி.வி (CVV) போன்றவை குறித்த தகவல்களை அளிக்கும்படி கேட்டிருக்கிறார். தமிழ்ச்செல்வனும் தனக்கு நேரிட இருக்கும் ஆபத்தை உணராமல், மர்ம நபர் கேட்ட எல்லா விபரங்களையும் கொடுத்திருக்கிறார். 

அதன் பின்னர், நடந்தவற்றைத் தமிழ்ச்செல்வனே நம்மிடம் விவரித்தார். ‘நான் எல்லா தகவல்களையும் சொன்ன பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி (OTP) எண்ணையும் கேட்கவே, அதையும் கூறினேன். அடுத்த நிமிடமே என் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.31,582 எடுக்கப்பட்டுவிட்டதாக என் மொபைலுக்குத் தகவல் வந்தது. பதறிவிட்டேன். உடனடியாக, எனக்கு வந்த எண்ணுக்கு, மீண்டும் போன் செய்தேன்.போன் போகவில்லை. நான் ஏமாற்றப்பட்ட விஷயம் அப்போதுதான் புரிந்தது. உடனடியாக, அரிமளம் இந்தியன் வங்கி மேலாளரை அணுகி, நடந்த விபரத்தைக் கூறினேன். அவர் எனது வங்கிக் கணக்கைப் பார்த்துவிட்டு, 'உங்கள் பணம் ஆன்லைன் பர்சஸிங் செய்யப்பட்டுள்ளது' என்றார். அதற்கு ஆதாரமாக மினி ஸ்டேட்மென்ட் ரசீதையும் என்னிடம் வழங்கினார். இது ஆன்லைன் மூலமாக நடந்த கொள்ளை. எனவே, மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் மனு கொடுக்க என் நண்பர்களுடன் வந்தேன்' என்றார். வங்கிகள் எத்தனை முறை தன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தாலும் இப்படி ஏமாறுவது, வாடிக்கையான நிகழ்வுகளாகிவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!