வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (17/11/2017)

கடைசி தொடர்பு:21:36 (17/11/2017)

’எங்கள் மைதானம்.. உங்களுக்குச் சாலையா?’ கொதிக்கும் மாணவர்கள்

தஞ்சையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக சரபோஜி கலைக் கல்லூரி மைதானத்தில் தார்ச்சாலை போடப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 மாணவர்

தஞ்சை வரும் 29-தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அ.தி,மு.க.வினர் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்வதால் மாநகராட்சி சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றோரின் கார்களை நிறுத்துவதற்காக அருகிலுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். அத்துடன் கார்கள் சென்றுவர மைதானத்தில் கருங்கற்களைக் கொட்டி தார்ச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கினர். 

தார்ச்சாலை அமைப்பதால் மைதானம் வீணாகிவிடும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் மைதானத்தில் தார்ச்சாலை அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களுடன், தஞ்சை  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. எஸ்.பி., டி.ஆர்.ஓ. மற்றும் அரசு அதிகாரிகள் வந்து மாணவர்களைச் சமாதனப்படுத்திய பிறகே சாலை மறியலைக் கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாது பரபரப்பும் ஏற்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க