வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (17/11/2017)

கடைசி தொடர்பு:22:33 (17/11/2017)

’யாருக்கும் பாதுகாப்பில்லை’! கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளி முகிலன்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடைப்பெற்ற சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஒரு நபர் விசாரணை ஆணையராக இருந்து விசாரணை செய்து வருகிறார். சேலம் சுற்றுலா மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையில் கூடங்குளம் அணுஉலை போராளி முகிலன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

கூடங்குளம் அணுஉலை போராட்டம் தொடர்பான வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை சிறையிலிருந்து வருகிறார். விசாரணைக்கு ஆஜராகும்பொருட்டு, பாளையங்கோட்டையிலிருந்து நேற்று சேலம் சிறைக்குக் கொண்டுவரப்பட்ட முகிலன், இன்று காலை சுற்றுலா மாளிக்கைக்குக் கொண்டுவரப்பட்டார். அலங்காநல்லூரில் போராடிய ராஜேஸ்வரி மற்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டத் தரப்பு வழக்கறிஞர்களும், காவல்துறை தரப்பு அரசு வழக்கறிஞர்களும் இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்திருந்தார்கள்.

இதுப்பற்றி தோழர் முகிலன், 'ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம். அதைத் தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமைப்புரீதியாகவோ, அரசியல் கட்சிரீதியாகவோ வரவில்லை. அனைவரும் யதார்த்தமாக தமிழரின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறதே என்ற தாக்கத்தில் ஒன்று கூடினோம்.

எங்களுடைய போராட்டம் அமைதியான முறையிலும் அறவழியிலும் இருந்தது. ஆனால் காவல்துறை திட்டமிட்டு என்னைக் கொலை செய்யும் நோக்கில் போராட்டக்களத்திலிருந்து தனிமைப்படுத்தி, அடித்துச் சித்தரவதை செய்தார்கள். வண்டியில் அழைத்துச் செல்லும் போது என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதை அங்கிருந்த மாதையன், டீக்கடைக்காரர் கார்த்திக் பார்த்தார்கள்.

போராட்டக்களத்தில் பெரும்பாலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இருந்தார்கள். போராட்டத்தின் இறுதிக் கலவரத்தின் போது இளைஞர்கள் பயன்படுத்திய செல்போன்கள், அதன் சார்ஜர்கள், கேமரா உட்பட பல பொருள்களைக் காவல்துறையினர் பறித்துக் கொண்டார்கள். அவை இன்றுவரை திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் தாக்கினார்கள்.

காவல்துறையைக் கட்டவிழ்த்துவிட்டு கண்மூடித் தனமாகத் தாக்கிய பின்னர், கொலை வழக்கு உட்பட 13 பிரிவுகளில் 45 பேர் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி போராடியும் தமிழக அரசு வாபஸ் வாங்கவில்லை. இது மக்களை ஏமாற்றும் அரசு. தற்போது உள்ள ஆட்சியில் பத்திரிகையாளர், வழக்கறிஞர் யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ என்றார்.