போயஸ் கார்டன் ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்னென்ன..? - விவேக் தகவல்! #ITRaids #LiveUpdates

ஜெயலலிதாவின் அறையை சோதனையிட அனுமதிக்கவில்லை: விவேக் தகவல்!

விவேக்

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை கடந்த நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தியது. ரெய்டு, தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஜெயா டிவியின் சி.இ.ஓ விவேக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு பென்ட்ரைவை சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் ' என்று விவேக் தெரிவித்துள்ளார். 

ரெய்டுக்கு முழுக்காரணம் மாநில அரசுதான்: வி.பி.கலைராஜன்

வி.பி.கலைராஜன்

போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம். சோதனையைக் கண்டு அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டார்கள் கொதித்துப் போயுள்ளனர் என்று தினகரன் ஆதரவாளர் கலைராஜன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். 

போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெ.தீபா வருகை!
 

ஜெ.தீபா

போயஸ் கார்டனுக்கு வருகை தந்த ஜெ.தீபா, `சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் இல்லம் இருக்கிறது. ரெய்டு குறித்து எனக்கு எந்தத் தகவலும் கூறவில்லை. செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன். போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ரெய்டுக்கு யார் பொறுப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் சகோதரர் தீபக்கிடமும் ரெய்டு குறித்து எந்த அனுமதியும் அதிகாரிகள் பெறவில்லை. என்னிடமும் அனுமதி பெறவில்லை. சசிகலா குடும்பத்திடம் அனுமதி பெற்று இந்த ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது. வேதா இல்லம் மற்றும் பூர்வீக சொத்து எங்களுக்குச் சொந்தமானது. அதை மீட்பது எனது கடமை. சசிகலா குடும்பத்தின் முழு ஒத்துழைப்போடுதான் இந்தச் சோதனை நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது' என்று கூறியுள்ளார். 

ஆதரவாளர்கள் கூடுவதற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்: தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜசுந்தர பாண்டியன்

போலீஸிடம் பேசும் ராஜசுந்தர பாண்டியன்

தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜசுந்தர பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, `விவேக் தற்போது போயஸ் இல்லத்துக்கு உள்ளே சென்றுள்ளார். அவர் வெளியே வந்த பிறகுதான் தெளிவாக எதுவாயினும் கூற முடியும். அதேவேளையில், எங்கள் தொண்டர்கள் இங்கு அமைதியான முறையில் கூடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.
 

கோஷமிட்ட தொண்டர்கள் கைது!

போயஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், ரெய்டுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர். அவர்களை கலைந்துபோகச் சொல்லி போலீஸ் அறிவுறுத்தியது. ஆனால், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்ததால், காவல்துறை அனைவரையும் கைது செய்தது. 

கைது செய்யப்படும் ஆதரவாளர்கள்

ரெய்டு குறித்து ஆட்சியாளர்களிடம் என்ன பதில் இருக்கிறது?: டி.டி.வி.தினகரன் கேள்வி

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் போயஸ் கார்டன் ரெய்டு குறித்து, `குறைந்தபட்சம் இந்த முதல்வரை மாற்ற வேண்டுமென்றுதான் நாங்கள் முதலில் கூறினோம். ஆனால், அதைத் தொடர்ந்து எங்கள்மீது தேசதுரோக வழக்குவரை போட்டார்கள். பல நடவடிக்கைகளை எங்கள்மீது ஏவிவிடுகின்றனர். இப்போதும் சொல்கிறேன், இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் நிறுவப்படும். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடியும் பன்னீரும் இந்த சோதனையை எங்கள்மீது நடத்துகின்றனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றப்போவதாக சொல்லிவிட்டு இப்படி சோதனைகளை நடத்துகின்றனர். இந்தச் செயலுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று பார்ப்போம்.' என்று தெரிவித்துள்ளார்.

தினகரன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாள்களுக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனை முடிவில்,  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வியின் தலைமைச் செயலதிகாரி விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

 

இந்தநிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனைக்காக நீதிமன்றத்தின் உத்தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தின் முக்கியக் கட்டடத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும், அதன் அருகில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் மட்டுமே சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!