தமிழக ஆளுநரின் நடவடிக்கையை மற்ற மாநில ஆளுநர்களும் பின்பற்ற வேண்டும்: இல.கணேசன் விருப்பம் | Other state Governors should follow TN governor's action, Ila.Ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 00:53 (18/11/2017)

கடைசி தொடர்பு:07:47 (18/11/2017)

தமிழக ஆளுநரின் நடவடிக்கையை மற்ற மாநில ஆளுநர்களும் பின்பற்ற வேண்டும்: இல.கணேசன் விருப்பம்

தமிழக ஆளுநரைப் பின்பற்றி மற்ற மாநில ஆளுநர்களும் தங்கள் மாநிலங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

 

ராமேஸ்வரத்தில் இல.கணேசன் பேட்டி

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை நான் முழுமையாக வரவேற்கிறேன். ஒரு ஆளுநர் இப்படியும் செயல்பட முடியும் எனக் காட்டிய அவருக்கு என் நன்றிகள். தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கையினை மற்ற மாநில ஆளுநர்களும் பின்பற்ற வேண்டும். மக்கள் ஆளுநரைச் சந்தித்து தங்கள் பிரச்னைகளைச் சொல்ல முடியும் என்பதையும், அரசின் திட்டங்கள் செயல்படுத்தபடுவது குறித்தும் ரகசியம் ஏதுமின்றி நேரடியாக ஆய்வு செய்வது வரவேற்கத்தக்கது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்கள். சில காலங்களுக்கு முன் திரையரங்குகளில் சிவப்பு வாளிகளில் `தீ' என எழுதி அதில் மணல் உள்ளிட்டவற்றை வைத்திருப்பார்கள். தீ விபத்து ஏற்பட்டால் மட்டுமே அது பயன்படும். அது போன்று ஆளுநரும் இருக்க வேண்டும் என்ற பழைமையான கருத்தினை மாற்ற முயற்சி செய்துள்ள ஆளுநருக்கு எனது பாராட்டுகள்'' என்றார்.