'இப்போ விழவா, அப்போ விழவா?' - மக்களை பயமுறுத்தும் 'உடைசல்' மின்கம்பங்கள்! | EB towers at Karur in dangerous condition

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (18/11/2017)

கடைசி தொடர்பு:15:14 (28/06/2018)

'இப்போ விழவா, அப்போ விழவா?' - மக்களை பயமுறுத்தும் 'உடைசல்' மின்கம்பங்கள்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கள்ளப்பள்ளியைச் சேர்ந்த மக்கள் கடைவீதி, மாரியம்மன்கோவில் தெரு, கருப்பத்தூர் காலனி, செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளை கடக்கும்போது உயிரை கையில் பிடித்தபடி நடக்கிறார்கள். காரணம்,அங்கே இருக்கும் மின்கம்பங்கள் கீழ்பக்கம் உடைந்தோ அல்லது முனைப்பக்கம் உடைந்தோ, 'இப்போ விழவா,அப்போ விழவா?' என்று மக்களை பயமுறுத்துவதாக இருப்பதுதான்.  

இதுபற்றி பேசிய கள்ளப்பள்ளியைச் சேர்ந்த மக்கள், "எங்க கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வசிக்கிறாங்க. எங்க ஊர்ல உள்ள கடைவீதி, மாரியம்மன்கோவில் தெரு, செட்டியார் தெரு, கருப்பத்தூர் காலனி ஆகிய பகுதிகளில்தான் அதிக மக்கள் வசிக்கிறாங்க. ஆனால், இந்த பகுதிகளில் இருக்கும் ஐந்து மின்கம்பங்கள் கீழ்பக்கம் உடைந்தும் அல்லது மேல்பக்கம் உடைந்தும் எந்நேரம் வேண்டுமானால் உடைந்து கீழே விழுந்து, கீழே செல்லும் மக்களின் தலையில் மின்சார கம்பி அறுந்து விழுந்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதனால், அச்சத்தோடு செல்ல வேண்டி இருக்கிறது. இந்த பகுதிகளில்தான் குழந்தைகளும், சிறுவர்களும், பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களும் சதா சர்வகாலமும் உலவுகிறார்கள். அவர்களுக்கு இந்த உடைந்த மின்கம்பங்களால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே இப்படி இந்த ஐந்து மின்கம்பங்களும் உடைந்து ஏனோதானோன்னு நிக்குது. 'அதை சரி பண்ணி எங்க உயிரை காபந்து பண்ணுங்க. இப்படி மின்கம்பங்கள் உடைந்த நிலையில் இருப்பதால், அவற்றின் கீழே போகும் நாங்க உயிரை கையில் பிடித்துக் கொண்டே நடமாட வேண்டி இருக்கு. விபரீதம் நடக்கும் முன் உடைந்து நிற்கும் அந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுங்க'ன்னு மாயனூர் மின்வாரிய அலுவலகத்தில் பலதடவை மனு கொடுத்து பார்த்துட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெயில்காலம்ன்னாலும் கூட பரவாயில்லை. இது மழைக்காலம். அந்த உடைந்த நிலையில் உள்ள ஐந்து மின்கம்பங்களும் உடைந்து விழுந்தால், அதனால் எங்களுக்கு பெரும் ஆபத்து வர வாய்ப்பிருக்கு. அதனால், அதிகாரிகள் எங்களின் அல்லாட்டத்தை புரிந்து கொண்டு, உடனே அந்த ஐந்து உடைந்த மின்கம்பங்களையும் அப்புறப்படுத்திவிட்டு புதிய மின்கம்பங்களை அமைத்து எங்க உயிரை காபந்து பண்ண நடவடிக்கை எடுக்கனும். இல்லைன்னா, மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தலாம்ன்னு இருக்கோம்!" என்றார்கள்.