"பொதுசாலையில் தினசரி மார்க்கெட் வேண்டாம்!" - கோரிக்கை வைக்கும் பள்ளப்பட்டி மக்கள்!

 


 

"மக்கள் நடமாடும் பொருசாலையில் தினசரி நடக்கும் மார்க்கெட்டால் போக்குவரத்து பிரச்னையும், விபத்துகளும் ஏற்படுது. அதனால், அதிகாரிகள் பொதுசாலையில் நடக்கும் தினசரி மார்க்கெட்டை தடுத்து நிறுத்தி, வேறு இடத்தில் மார்க்கெட்டை நடத்த நடவடிக்கை எடுக்கனும். இல்லைன்னா,நாங்க போராட்டம் நடத்துவோம்!" என்று பொங்குகிறார்கள் பள்ளப்பட்டி பேரூராட்சி மக்கள்.

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது பள்ளப்பட்டி முதல்நிலை பேரூராட்சி. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் பள்ளப்பட்டி பேரூராட்சியும் ஒன்று. இந்த நிலையில்தான் பள்ளப்பட்டி பேரூராட்சியில் உள்ள பொதுச்சாலையில் தினசரி மார்க்கெட்டை நடத்தி, விபத்துகளை வியாபாரிகள் ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புழுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுசம்மந்தமாக நம்மிடம் பேசிய பள்ளப்பட்டி பொதுமக்கள்,

"தினசரி மார்க்கெட் நடக்கும் பொதுச்சாலையில்தான் ஆர்.ஐ அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு அலுவலகங்கள் இருக்கும் சாலையாகவும், பேருந்து நிலையம் செல்லும் சாலையாகவும், சரக்கு லாரிகள் போகும் சாலையாகவும் இருக்கிறது. இந்த முக்கிய சாலையில்தான் பல மாதங்களாக தினசரி மார்கெட்டாக அதிகாரிகள் அனுமதியின்றி வியாபாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்வோர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதனால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாதி, விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. தினசரி மார்க்கெட்டாக உருவாகியுள்ள இந்த பகுதியில்தான் வாரச்சந்தை உள்பகுதியும் உள்ளது. வாரச்சந்தை போக மீதமுள்ள தினங்களில் வாரச்சந்தை நடக்கும் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது. அதனால், இப்போது பொதுச்சாலையில் தினசரி மார்க்கெட் அமைத்திருக்கும் வியாபாரிகள் அந்த வாரச்சந்தை நடக்கும் இடத்தின் உள்வளாகத்திலேயே அமைக்க வேண்டும் என்று அதிகாதிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தோம். ஆனால், அதிகாரிகள் எங்கள் புகாரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வாரச்சந்தை நடக்காத நாள்களில் சமூக விரோதிகள் சிலர் அந்த இடத்தில் தண்ணி அடிப்பது, மோசமான விஷயத்திற்கு பயன்படுத்துவது என்று அந்த இடத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், பொதுச்சாலையில் தினசரி மார்க்கெட் அமைத்திருக்கும் வியாபாரிகள் வாரச்சந்தை நடக்கும் இடத்தில் நடத்தினால், அந்த இடத்தில் நடக்கும் மோசமான செயல்களை தடுக்கலாம். அதோடு,பொதுச்சாலையும் பழையபடி போக்குவரத்து நெரிசல் இல்லாமல், மக்களை அல்லாட்டத்தில் இருந்து தடுக்கும். அதனால்,வியாபாரிகளை வாரச்சந்தை நடக்கும் இடத்தில் தினசரி மார்க்கெட் அமைக்க வைக்க நடவடிக்கை எடுக்கனும். இல்லைன்னா, போராட்டம் நடத்துவோம்!" என்றார்கள் காட்டமாக!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!