எடப்பாடி பழனிசாமிக்கு செல்லூர் ராஜு பிரமாண்ட வரவேற்பு!

மதுரையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தார், அமைச்சர் செல்லூர் ராஜு. சிவகங்கையில் இன்று  நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள, நேற்றிரவு 8 மணிக்கு மதுரை வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அழகர் கோயில் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். சமீபத்தில் தென் மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு மதுரையின் புறநகர் வழியாக செல்லும்போது, தன்னுடைய தொகுதி என்ற கெத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பார். செல்லூர் ராஜுவை பக்கத்தில் விட மாட்டார்கள்.

செல்லூர் ராஜு

 

ஆனால், இந்த முறை மதுரையில் தங்குவதால், மாநகர செயலாளர் என்ற முறையில் மதுரையில் பிரமாண்ட வரவேற்பை கொடுத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையின் அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள், கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள், ஃபிளக்ஸ்கள் என்று அமர்களப்படுத்தியிருந்தார்.

விமானநிலையத்திலிருந்து வில்லாபுரம் வழியாக ஜெயவிலாஸ், தெற்கு வாசல், காஜிமார் தெரு, க்ரைம் ப்ராஞ்ச், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் என்று வரிசையாக ஒவ்வொரு வட்டத்தின் சார்பிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் மூலம் கும்ப மரியாதை, கரகாட்டம், ஒயில், தப்பாட்டம், என்று வரவேற்பை கொடுத்தார். விளம்பரங்களில் எடப்பாடியை நல்லாட்சி நாயகன் என்று குறிப்பிட்டிருந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி எடப்பாடியுடன் தன் படத்தையும் ஃபிளக்ஸ்களில் வைத்திருந்தார் செல்லூர் ராஜு. காலை முதல்வர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் வரை செல்லூர் ராஜுவின் பிரமாண்ட வரவேற்பு, உபசரிப்பு தொடரும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!