வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (18/11/2017)

கடைசி தொடர்பு:15:23 (09/07/2018)

கலெக்டருக்கு போட்டியாக டி.ஆர்.ஓவும் டெங்கு தடுப்புப் பணிகள்குறித்து ஆய்வு!

 

கரூர் மாவட்டத்தை டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், தினமும் அதிகாலையில் மாவட்டம் முழுக்க ஒவ்வொரு பகுதியாக போய் டெங்கு தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டுவருகிறார். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாமல், டெங்கு கொசுக்கள் வளர்வதற்கு வழிவகைசெய்யும் நபர்களுக்கு, ஸ்பாட்டிலேயே ஃபைன் போட்டு அலறவிடுகிறார். இந்நிலையில், இந்த டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்ய, மாவட்ட ஆட்சித்தலைவருக்கு போட்டியாக, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷும் அதிரடியாக மாவட்டம் முழுக்க விசிட் அடித்து, டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்து வருகிறார்.

ஒரு மாத காலமாகவே குளித்தலை, தோகைமலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்து, சூர்யபிரகாஷ் டெங்கு தடுப்புப்  பணிகளை ஆய்வுசெய்துவருகிறார். டெங்கு கொசு வளர்வதற்கு வழிவிட்ட நபர்களுக்கு, ஸ்பாட்டிலேயே ஃபைன் போடுவதோடு, அவர்களிடம் 6 மணி நேரம் டெங்குவின் கொடூரம் பற்றி லெக்சர் கொடுக்கும் அவர், 'இனிமேல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று அன்பாகப் பேசி, அவர்களுக்கு டெங்குகுறித்தும், சுற்றுப்புறத் தூய்மைகுறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அப்படி கரூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பள்ளி, தனியார் நிறுவனங்கள், வீடுகள், கடைகள் என்று பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் சகிதம் சென்ற அவர், ஒவ்வொருவரிடம் 10 நிமிடம் நின்று டெங்கு குறித்த தீமைகளைத் தெளிவாக விளக்கினார்.

நம்மிடம் பேசிய அவர், "படித்தவர்கள், படிக்காதவர்கள்  எல்லோருமே தங்கள் வீட்டில் ஒருவருக்கும் டெங்கு பாதிக்காத வரை டெங்கு குறித்த அச்சம் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார்கள். அவர்களிடம்  டெங்கு பற்றி எடுத்துச் சொல்லி, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம். பல பேர் ஆர்வமா கேட்கிறாங்க. சிலர், வேண்டா வெறுப்பா கேட்கிறாங்க. இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை இதோடு நிறுத்தாமல், சுற்றுப்புறத்தை கரூர் மக்கள் தாமாக முன்வந்து தூய்மையாக வைத்துக்கொள்ள முனையும் வரை எங்களது பிரசாரம் தொடரும். கரூர் மாவட்டத்தை விரைவில் தூய்மையான மாவட்டமாக நீங்கள் பார்க்கலாம்" என்றார் நம்பிக்கையுடன்.